Close

The Hon’ble Forest Minister Announcement (Sirumalai)

Publish Date : 04/07/2019

செ.வெ.எண்:09/2019 நாள்:03.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

சிறுமலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில்; பல்லுயிர்ப்பூங்கா அமைக்கப்படும் – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் அறிவிப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைக்கு அருகில் சிறுமலை உள்ளது. சிறுமலையில் வளமான பல்லுயிர் வகை காடுகளும், அதே நேரத்தில் நடுமலைப் பகுதியில் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகளும் அமைந்துள்ளன. இங்கு வளர்ந்துவரும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் காப்பித்தோட்டங்கள், பழத்தோட்டங்கள், பல காய்கறி பயிர்கள் பயிரிடுதல் ஆகியவற்றின் விளைவாக சிறுமலையில் உள்ள அரிய வகை தாவரங்களும் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. சிறுமலையின் தாவரங்கள் கணக்கெடுப்பு ஆய்வின்படி தென்னிந்தியாவில் உள்ள தாவர வகைகளில் 536 உயிர் தாவரங்களையும், 895 சிற்றினங்களையும் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

விரைவான நகரமயமாக்கல், அதிக மக்கள்தொகை மற்றும் இயற்கை வளங்களை அதிகமாக சுரண்டுவது போன்ற செயல்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை அழிவதற்கு காரணமாக அமைகின்றன. வளர்ந்து வரும் நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இழந்த பன்முகத்தன்மையை மீட்டெடுக்கும் விதமாக அரிதான மற்றும் அழிவின் தருவாயில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி சிறுமலையில் ரூ.5 கோடி திட்டமதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும். 2019-20-ம் ஆண்டில் இத்திட்டம் ரூ.2.43 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

இவைதவிர கடல்வாழ் உயிரினங்களான ஆலிவ்ரிட்லிஸ் மற்றும் கடல் பசு ஆகியவை எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. இதனால் கடல் ஆமை மற்றும் கடல் பசுக்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை வனச்சரணாலயம் அருகே முப்பரிமான அருங்காட்சியகத்துடன் கூடிய சூரிய சக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி நவீன வசதிகளுடன் கூடிய கடல் ஆமை பாதுகாப்பு மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்.

யானைகளை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களின் சிரமத்தை குறைக்கும் விதத்திலும், யானைகள், மனித வாழ்விடங்களுக்குள் புகுவதை கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவினைக் கொண்டு தொலைதூரக் கட்டுப்பாட்டு தெர்மல் கேமரா, கண்காணிப்பு படப்பிடிப்புக்கருவி, கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முன்னெச்சரிக்கை அமைப்பு கோவை வனக்கோட்டத்தில் ரூ.7.24 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகம் மற்றும் தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் தரத்தினை மேம்படுத்த தமிழ்நாடு வனஉயிர் பயிற்சியகத்தின் உட்கட்டமைப்பினை நவீனப்படுத்தும் விதமாக புதிதாக 15 அறைகள் கொண்ட பெண்கள் விடுதி கோவை மற்றும் வைகை அணை பயிற்சி மையங்களில் கட்டுவதற்கும் மற்றும் வகுப்பறை ஆய்வுக்கூடம், கணினி அறை, நூலகம், கலையரங்கம், அருங்காட்சியம் அமைப்பதற்கும், புதிய குடியிருப்புகளை கட்டவும், ஏற்கனவே உள்ள குடியிருப்புகளை பராமரித்து புதுப்பிக்கவும் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கும் ரூ.15.74 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு வனத்துறையில் உள்ள முன்நிலைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ஒவ்வொரு வருடமும் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 2540 குடியிருப்புகளில் 50 சதவீத குடியிருப்புகள் நல்ல நிலையில் இல்லை. அநேக குடியிருப்புகளில் மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் மற்றும் கட்டிடங்களின் சுவர் மற்றும் தளங்களின் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இக்குடியிருப்புகளுக்கு 3 வருடங்களில், வருடத்திற்கு ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதியில் சிறப்பு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். 2019-20-ம் ஆண்டிற்கு ரூ.10 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

வனத்துறையில் அரிதான மரங்கள் திருடப்படுவதை தடுக்கவும், வனக்குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் மூலம் குற்றங்களை தடுத்து உண்மையான குற்றவாளிககை கண்டுபிடிக்க இயலும். எனவே வனத்துறை அலுவலகங்களில் அரசு சந்தனமர கிடங்கு, மரக்கிடங்கு மற்றும் சோதனைச்சாவடிகளில் 2019-20-ம் ஆண்டிற்கு ரூ.1.03 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் 2019-20-ம் ஆண்டில் சர்வதேச தரத்திலான குளிர்சாதன வசதியுடன் கூடிய 25 அறைகள் கொண்ட பசுமை கட்டிட விடுதி ரூ.8.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இவ்விடுதி முதுநிலை அலுவலர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் ஆகியோருக்கு தனித்தனி அறைகள், நவீன சமையல் அறை மற்றும் உணவு உண்ணும் அறை, நூலகம், சூரிய உதவியுடன் கூடிய தடையில்லா மின்சாரம், அதிவேக இணைய இணைப்பு, தொலைக்காட்சி, பூங்கா, வாகன நிறுத்தங்கள் ஆகியவைகள் கொண்டதாக இருக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம், தண்டரை மற்றும் புல்லேரி மூலிகைப்பண்ணை தோட்டங்களில் 3 ஆண்டுகளில் ரூ.3.34 கோடி திட்ட மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 2019-20-ம் ஆண்டில் இத்திட்டம் ரூ.2.47 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.