Close

The Hon’ble Forest Minister distribution Free Labtop for School HM

Publish Date : 08/07/2019

செ.வெ.எண்:23/2019 நாள்:06.07.2019
lop

திண்டுக்கல் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் 1,641 நபர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியினை – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினியினை இன்று (06.07.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு அம்மா வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் தேவையை அறிந்து, கோரிக்கைக்கு முன்பாகவே திட்டங்களை அறிவித்து, தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களான மருத்துவ காப்பீடு திட்டம், பசுமை வீடுகள் திட்டம், விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீட்டுத்திட்டம், உழவர் பாதுகாப்புத்திட்டம் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், 2 பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறு நிதியுதவித் திட்டம், அம்மா பரிசு பெட்டகம் என பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், கல்வி கற்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெற வேண்டும்; என்ற உயரிய நோக்கில், பள்ளி கல்வித்துறையில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கென அதிக நிதி ஒதுக்கீடு செய்து, 14 வகையான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மகத்தான திட்டங்களை மாணவ, மாணவியர்களுக்கென செயல்படுத்தி கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் குழந்தைகளும் தரமான கல்வியை பெறும் வகையில், அப்பகுதிகளில் பள்ளிகள் சிறந்த முறையில் நடைபெறுவதற்கென ஆசிரியர்களை நியமித்து, அக்குழந்தைகள் தரமான கல்வியை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.

மேலும் போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர்கள் அவர்களின் திறமையை வளர்த்து தங்களது தகுதியை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது நிலையையும், தங்களின் குடும்ப சூழ்நிலையையும் மேம்பாடு அடைய செய்ய முடியும்;. அதற்கு அடிப்படையாக அமைவது, என்றும் அழியா சொத்தான கல்வியே ஆகும். அப்படிப்பட்ட கல்வியை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, தமிழகத்தின் எதிர்கால தூண்களாக விளங்கும் மாணவ, மாணவியர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரிய பெருந்தகைகளை சார்ந்ததாகும்.

மேலும், ஆசிரியர்களின் தேவைகளையும் மற்றும் கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு ஆசிரியர்களின் பணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையிலும் மாணவ, மாணவியர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் ஆசிரியர்கள் உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு கற்பிப்பதற்கு ஏதுவாக , இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினியினை வழங்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று தலைமையாசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 800 விலையில்லா மடிக்கணினி, தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 841 மடிக்கணினி என மொத்தம் 1,641 மடிக்கணினிகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று, நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயிலும் 11,745 மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் 12,576 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி; வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழக்கு நிலுவையின் காரணமாக வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்சமயம் வழக்குகள் நிறைவுற்று மேற்கண்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பான தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் மாணவ, மாணவியர்கள் பயனடைந்த காரணத்தினாலும், ஆசிரியரின் சிறப்பான செயல்பாடுகளினாலும், நமது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களுக்கும் மற்றும் திறன்பட பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதே போன்று, ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

மேலும், ஆசிரியர் பெருந்தகைகள் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கி;ட வேண்டும். சிறந்த கல்வியாளர்கள் உருவாக்கப்படுவதினால் தமிழகத்தின் பொருளாதாரம் மட்டுமின்றி இந்திய பொருளாதாரமும் வளர்ச்சி அடைய காரணியாக அமைகிறது. சிறந்த கல்வியாளர்களை உருவாக்குகின்ற ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். எனவே மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்து நமது மாநிலத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிட பாடுபட வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் தற்சமயம் மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு இல்லாமல் உள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி துறைசார்ந்த அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டு, அரசால் துரிதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தற்சமயம் போதுமான அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் குழாய் பழுது மற்றும் குடிநீர் இணைப்புகளில் உள்ள இடர்பாடுகளால்தான் சீரான குடிநீர் வழங்குவதற்கு இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட பணியினை சரிவர மேற்கொண்டு சீரான குடிநீர் வழங்குவதற்கும், மேலும் எந்தந்த பகுதிகளில் குடிநீர் தேவையுள்ளதை அறிந்து நிரந்தர தீர்வுகாணும் வகையில், நகர், ஊரக பகுதி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள், தேவையான குடிநீர் பணிகளுக்கென திட்ட அறிக்கையினை தயார் செய்யவும், பொதுமக்களின் அன்றாட தேவையான குடிநீர் வழங்கும் பணியினை தொய்வு இல்லாதவாறு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வி.பி.பி.பரமசிவம், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சே.தேன்மொழி, முன்னாள் மேயர் வி.மருதராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.சோ.சாந்தகுமார் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள்; கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.