Close

The Hon’ble Forest Minister – Other State Employees – JHARKHAND and ODISHA

Publish Date : 26/05/2020
od1

செ.வெ.எண்:-33/2020 நாள்:25.05.2020
திண்டுக்கல் மாவட்டம்
od2

திண்டுக்கல்லில் இருந்து ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 1,875 வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் திண்டுக்கல்லில் இருந்து ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 1,875 தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திண்டுக்கல் ரயில்வே சந்திப்பில் இருந்து இன்று(25.05.2020) சிறப்பு ரயில்களில் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமக்களின் நன்மை கருதி, நோய் தொற்றை தடுக்கும் பொருட்டும், சமூக விலகலை உறுதி செய்யவும் குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன் கீழ் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு 31.05.2020-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வந்து பல்வேறு மாவட்டங்களில் தங்கி பல்வேறு தொழிற்சாலைகளிலும், சாலையோர வியாபாரிகளாகும், கட்டடத் தொழிலாளர்களாகவும்; தங்கி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்; மாணவர்களாகவும் பலர் தங்கியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவினால் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அவர்கள் விரும்பினால் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்த 539 தொழிலாளர்கள், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த 176 தொழிலாளர்கள் என 715 தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்த 1,046 தொழிலாளர்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த 114 தொழிலாளர்கள் என மொத்தம் 1,160 தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலமான ஒடிசா மாநிலத்திற்கும் என மொத்தம் 1,875 தொழிலாளர்கள் இன்று சிறப்பு ரயில்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்;களுக்கு பயணத்தின்போது 3 நாட்களுக்குத் தேவையான உணவு, பிஸ்கெட், பிரெட், ரொட்டி, சப்பாத்தி, புரோட்டா, குடிநீர் பாட்டில், வெங்காயம் ஆகியவை அடங்கிய பை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வெளிமாநிலம் செல்லும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக திண்டுக்கல் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் உணவுப்பொருட்கள் அடங்கிய பைகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த உணவு பைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

முன்னதாக பீகார் மாநிலத்திலிருந்து தமிழகம் வந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்த 1339 தொழிலாளர்கள், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த 261 தொழிலாளர்கள் என மொத்தம் 1600 தொழிலாளர்கள் கடந்த 20.05.2020 அன்று திண்டுக்கல் ரயில்வே சந்திப்பில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக அவர்களுடைய சொந்த மாநிலமான பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 105 நபர்கள், புதுடில்லியைச் சேர்ந்த 5 நபர்கள் மற்றும் ஜம்முகாஷ்மீரைச் சேர்ந்த 6 நபர்கள் என 116 வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரயில் கட்டணம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.835, ஒடிசா மாநிலத்திற்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.765, பீகார் மாநிலத்திற்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.950 ஆகும். இந்த கட்டணத் தொகையை தமிழக அரசே ஏற்று வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் வெளி மாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.கோவிந்தராசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சக்திவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.வி.மருதராஜ், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் திரு.சி.எஸ்.ராஜ்மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.ஆர்.ராஜ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆயுஷ்சிங், இ.ஆ.ப., உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.