Close

The Hon’ble Forest minister – Road Safety rally

Publish Date : 22/01/2020
1

செ.வெ.எண்:-36/2020 நாள்:-21.01.2020
திண்டுக்கல் மாவட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபேரணியை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் 31-வது சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சக்திவேல் முன்னிலையில் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:

இன்றைய நவீன உலகில் வாகனம் ஓட்டுவது என்பது இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய விபத்துகள் பெரும்பாலானவை சாலைகளில் நடக்கிறது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக தலை கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு அலுவலர்களும் சாலை விதிமுறைகளை மதித்து பொதுமக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பிற்காகத்தான் சாலை பாதுகாப்பு விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

விபத்தில்லாத சாலை போக்குவரத்தினை ஏற்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வருடம்தோறும் தேசிய அளவில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு புதிய சாலைகள், பாலங்கள், அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சாலை வசதிகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் சாலைகளில் தேவையான இடங்களில் மையத்தடுப்புச் சுவர்(Centre median) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த சாலைகளைசீரமைத்து, வளைவுகளில் பிரதிபலிக்கும் அட்டைகள் ஒட்டியும், இணைப்பு சாலைகள், பிரதானசாலைகளைஎளிதில் அடையாளம் காணும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று ஓட்டுநர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தேவையான இடங்களில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்களால்; விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சாலை விதிகளை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்கும் பொருட்டு தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 15 சதவீதத்திற்கும் மேல் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டும் முன் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் கருத்தில் கொள்ள வேண்டும். விபத்துகளால் நமது குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புகளையும் தவிர்க்க முடியும். பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல்துறை ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஓட்டுநர்கள், அரசு சார்பு நிறுவன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்துகொண்டனர். நடைபேரணி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.வி.மருதராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.கே.ஆனந்த், திரு.வி.கண்ணன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.பாரதிமுருகன் மற்றும் காவல்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்