Close

The hon’ble Forest Minister Water Source Review Meeting – (Nilakkottai Union)

Publish Date : 24/06/2019
1

2

செ.வெ.எண்:-48/2019 நாள்:- 23.06.2019

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நகர் மற்றும் ஊரக பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நகர் மற்றும் ஊரக பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தேன்மொழி முன்னிலையில், முதன்மை நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர்; அவர்கள் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான வகையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் விநியோகத்தில் குறைபாடு இருப்பதால் பொதுமக்களுக்கு சில இடங்களில் குடிநீர் சீராக கிடைப்பதில் தடை உள்ளது. இதனை களைவதற்காக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி நகர் மற்றும் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு சீரான வகையில் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூர் ஊராட்சி ஒன்றியம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், வடமதுரை ஊராட்சி ஒன்றியம், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், தொப்பம்பட்டி, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த காலங்களில் 6 கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது மழை இல்லாத காரணத்தால் வைகை அணையில் இருந்து வரும் நீர்வரத்து இல்லாத காரணத்தால் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் அருகில் ஆழ்துளை கிணறுகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப்பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வழங்கும் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே 64 தரைமட்ட நீர்த்தொட்டிகள் உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதன்மூலம் விரைவில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைப்பதற்கும் மற்றும் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை சீர் செய்வதற்கும், ஆட்கள் பற்றாக்குறை உள்ள இடத்தில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கவும், இப்பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி;த்தலைவர் அவர்களும் இப்பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எந்தந்த பகுதிகளில் குடிநீர் தேவையுள்ளதை அறிந்து நிரந்தர தீர்வுகாணும் வகையில், ஊரக பகுதி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள், தேவையான குடிநீர் பணிகளுக்கென திட்ட அறிக்கையினை தயார் செய்யவும், பொதுமக்களின் அன்றாட தேவையான குடிநீர் வழங்கும் பணியினை தடையில்லாதவாறு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, முன்னாள் மேயர் திரு.வி.மருதராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் திரு.பிரபுராம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கருப்பையா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் திரு. யாகப்பன், முன்னாள் கவுன்சிலர் திரு.பாண்டியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்