The hon’ble Forest Minister Water Source Review Meeting

செ.வெ.எண்:-58/2019 நாள்:- 27.06.2019
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.06.2019) திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இ.பெரியசாமி (ஆத்தூர் தொகுதி), திரு.அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம் தொகுதி), திரு.இ.பெ.செந்தில்குமார் (பழனி தொகுதி), திரு.ஆ.ஆண்டிஅம்பலம் (நத்தம் தொகுதி) ஆகியோர் முன்னிலையில், முதன்மை நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர்; அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதும் தற்சமயம் மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு இல்லாமல் உள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கென அரசால் துரிதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் துறைசார்ந்த தலைமை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கு, துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்தாண்டு ஏற்கனவே ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தற்சமயம் கூடுதலாக குடிநீர் திட்ட பணிகளுக்கென ரூ.200 கோடியும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு போதுமான அளவில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு துரித நடவடிக்கைகளுக்கிடையே நேற்றைய தினம், சென்னையில் கனமழை பொழிந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் சில பகுதிகளிலும் அங்காங்கே மழை பெய்யப்பட்டு வருகிறது. மழை பொழிவதன் மூலம் விரைவில் குடிநீர் பற்றக்குறைக்கு தீர்வு ஏற்படுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புறப்பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அந்தந்த பகுதிகளில் போதுமான அளவில் தற்சமயம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 35 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏறக்குறைய 40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 3 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ஒப்பந்தகாரர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நத்தம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 38 மில்லியன் லிட்டர் பெறும் வகையில் சுமார் 636 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒப்பந்தகாரர் பாரமரிப்பில் உள்ளது. பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினால் 35 கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 30 மல்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே பெறப்பட்டு வழங்கப்படுகிறது. பற்றாக்குறை தேவையை நத்தம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம், உபரி நீரை (16 MLD Bulk Provision) கொண்டு குஜிலியம்பாறை, கோவிலூர், வெறியப்பூர் ஆகிய இடங்களில் இணைத்து திண்டுக்கல், வேடசந்தூர் கூட்டுக்குடிநீர் திட்டங்களை இணைத்து திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படுகிறது. மேற்கண்ட 38 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 1 மாநகராட்சி, 1 நகராட்சி, 12 பேரூராட்சி மற்றும் 1655 கிராம குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம், நத்தம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நிலக்கோட்டை பேரூராட்சி மற்றும் 1018 கிராம குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பழனி நகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கென ரூ.21.60 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் தற்சமயம் 95 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு;, சோதனை ஓட்டத்தில் உள்ளது.
இதுதவிர, காவேரி கூட்டுகுடிநீர் திட்டம் செல்லாத கிராமங்களுக்கு, காவேரி கூடடுக்குடிநீர்த் திட்டத்தில் இணைத்து அனைத்து கிராமங்களுக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு திட்டமிடப்பட்முள்ளது. மேலும், கிராமங்களில் நீர் நிலைகள் உள்ள இடங்களை கண்டறிந்து ஆழ்துளை குழாய்கள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைப்பதற்கும் மற்றும் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை சீர் செய்வதற்கும், இப்பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, கடந்த 20.06.2019 அன்று குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வேடசந்தூர், குஜிலியம்பாறை மற்றும் வடமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் 5 பேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் குறித்தும் மற்றும் 22.06.2019 அன்று மாநகராட்சி அலுவலகத்தில், திண்டுக்கல் மாநகராட்சி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நகர் மற்றும் ஊரக பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்தும், அதனை தொடர்ந்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நகர் மற்றும் ஊரக பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்தும் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து விடுப்பட்ட நகர் மற்றும் ஊரக பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து, அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முதன்மை நிலை அலுவலர்களுடனான ஆயு;வுக்கூட்டம் இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், பங்கேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் குடிநீர் விநியோகம் தொடர்பாக மேற்கொண்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் தெரிவி;த்தனர்.
மேலும், எந்தந்த பகுதிகளில் குடிநீர் தேவையுள்ளதை அறிந்து நிரந்தர தீர்வுகாணும் வகையில், நகர், ஊரக பகுதி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள், தேவையான குடிநீர் பணிகளுக்கென திட்ட அறிக்கையினை தயார் செய்யவும், பொதுமக்களின் அன்றாட தேவையான குடிநீர் வழங்கும் பணியினை தொய்வு இல்லாதவாறு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, முன்னாள் மேயர் திரு.வி.மருதராஜ், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் திரு.பிரபுராம், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்