Close

The Hon’ble Forest Minister(Free Cycle Distribution)

Publish Date : 10/02/2020
1

செ.வெ.எண்:-17/2020 நாள்:08.02.2020

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 14,771 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தகவல்;.

திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (08.02.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் தேவையை அறிந்து, கோரிக்கைக்கு முன்பாகவே திட்டங்களை அறிவித்து தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்களின் மூலம் மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசால் தற்சமயம் கல்வி கற்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெற வேண்டும்; என்ற உயரிய நோக்கில், பள்ளி கல்வித்துறையில், இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு பள்ளிக்கல்வித்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கென பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே மாணவ, மாணவியர்கள் தரமான கல்வியை பெறுவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு, பள்ளி கல்வித்துறையில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கல்வி உதவித்தொகை, மதிய உணவு, புத்தகப்பை, காலணிகள், புவியியல் வரைபடம், வண்ணப்பென்சில்கள், கிரையான்ஸ் உட்பட கற்றலுக்குத் தேவையான 14 வகையான கல்வி உபகரணங்கள் அனைத்தையும் பாகுபாடின்றி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 90,950 மாணவ, மாணவியர்களுக்கு பாட நூல்கள், 75,000 மாணவ, மாணவியர்களுக்கு பாட குறிப்பேடுகள், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 45,380 மாணவ, மாணவியர்களுக்கு 1,81,520 வண்ண சீருடைகள், 12,966 மாணவ, மாணவியர்களுக்கு கணித உபகரண பெட்டிகள், 26,281 மாணவ, மாணவியர்களுக்கு புவியியல் வரைபடம், 37,450 மாணவ, மாணவியர்களுக்கு காலணிகள், 81,904 மாணவ, மாணவியர்களுக்கு வண்ண பென்சில்கள் ஃ கிரையான்கள், உயர் மற்றும் மேல்நிலைக்கல்வி இடைநிற்றலை தவிர்த்திட 1771 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.53.13 இலட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளன. மேலும், 4,545 ஆசிரியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டதன் மூலம், தொலைதூரத்தில் சென்று பாடம் படிக்க வேண்டிய சூழல் அமையப் பெற்றுள்ளது என்பதை காரணம் காட்டி, பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழ்நிலை முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால், நாட்டின் வருங்கால தூண்களாகிய மாணவச் செல்வங்கள் பள்ளி இடைநிற்றலை தவிர்த்து முழுமையான கல்வியைப் பெற்று தங்கள் வாழ்விலும், சமூகத்திலும் ஒளியை ஏற்றி வைக்க, தமிழக அரசின் இந்த விலையில்லா மிதிவண்டி திட்டம் மிகுந்த பயன்பாடு உள்ள தொலை நோக்கு திட்டமாக அமைந்துள்ளது. கடந்த 2011 முதல் 2016 வரை (5 ஆண்டுகளில்) மட்டும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 96,788 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.27.20 கோடி மதிப்பீட்டில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் மூலம் இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 128 பள்ளிகளைச் சார்ந்த 14,740 மாணவர்களுக்கும், 18,141 மாணவியர்களுக்கும் என மொத்தம் 32,881 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம், இவ்விழாவின் மூலம் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 324 மாணவர்களுக்கும், திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 171 மாணவர்களுக்கும், ஜான்பால் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 192 மாணவர்கள் மற்றும் 27 மாணவியர்களுக்கும், அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 373 மாணவியர்களுக்கும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 297 மாணவியர்களுக்கும், புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 582 மாணவியர்களுக்கும், திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 229 மாணவர்களுக்கும், புனித லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 555 மாணவியர்களுக்கும், பழனிசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 45 மாணவர்கள் மற்றும் 23 மாணவியர்களுக்கும், வாசவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 50 மாணவியர்களுக்கும் என மொத்தம் 10 பள்ளிகளைச் சேர்ந்த 961 மாணவர்கள் மற்றும் 1907 மாணவியர்கள் என 2,868 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.113 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 14,771 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

இதுபோன்று தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால நலனையும், குடும்பத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, நல்ல முறையில் கல்வி கற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.வி.மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் திரு.சி.எஸ்.ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.பாரதிமுருகன், அறங்காவலர்கள் தேர்வு குழு தலைவர் திரு.பிரேம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மணிவண்ணன், தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.