Close

The Hon’ble Minister program (School)

Publish Date : 27/12/2021
.

..

செ.வெ.எண்:-63/2021

நாள்:25.12.2021

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் GRB நிறுவனத்தின் சார்பில் கட்டப்படும் பள்ளி வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் ஆகியோர் முன்னிலையில், இன்று (25.12.2021) ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் GRB நிறுவனத்தின் சார்பில் கட்டப்படும் பள்ளி வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சியிலிருந்து கூடுதலாக கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதியிலும் வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு வகுப்பறை மற்றும் கலையரங்கம் கட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 30 வகுப்பறைகள் கட்டப்படும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறைக்கு ரூபாய் 33 ஆயிரம் கோடி நடப்பாண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தமிழகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து, பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள். ஏற்கனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி பள்ளியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்கள் மிக சிறந்த முறையில் படித்து, மிக உயர்ந்த பதவிகளில் பணியாற்றி வருகின்றார்கள். ஒட்டன்சத்திரத்தில் இந்திய ஆட்சிப்பணிக்கான பயிற்சி மையம் செயல்படுவதற்கு இடம் தேர்வு செய்து, பயிற்சி வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே, இரண்டு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப கல்லூரி பழனி நகரில் இயங்கி வருகின்றன. அங்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகளவில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்தினோம்.

அதன்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கல்லூரியும், உயர்கல்வித்துறை சார்பில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கல்லூரியும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் சித்தா கல்லூரி தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களுக்கு நல்ல முறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த, தேவையான பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி, GRB நிறுவனத்தின் உரிமையாளர் திரு.பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.