The Hon’ble Ministers ITI Inspection

செ.வெ.எண்:-36/2021
நாள்:20.10.2021
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் நத்தம் சாலையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை ஆய்வு செய்தார்கள்.
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கே.வீரராகராவ்,இ.ஆ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி அவர்கள் முன்னிலையிலும், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாலையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் வகுப்பறை கட்டிடங்கள், மைதானம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து இன்று (20.10.2021) ஆய்வு செய்தார்கள்.
ஆய்விற்கு பின்னர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களுக்கு தேவையான வகுப்பறை வசதி, ஆய்வக வசதி, கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அறிக்கை வழங்கப்படும். மேலும், மாணவ, மாணவியர்கள் தொழில் பயிற்சி நிறுவனங்களில் சிறந்த பயிற்சி பெற்று சிறந்தவராக உருவாக வேண்டும். அரசின் தொழில் பயிற்சி நிலையத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்களிலும் மாணவ, மாணவியர்கள் சேர்வதற்கு, கல்வி அடிப்படையில் இடம் கிடைக்கிறது. தற்போது, பேஷன் டெக்னாலாஜி, டெய்லரிங், கார்மெண்ட்ஸ் போன்ற தொழில் படிப்புகளுக்கு அதிகமாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, கல்விதான் உங்கள் வாழ்க்கையில் அடித்தளமாக அமைந்து, உங்கள் எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனவே, மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 90 தொழில் பயிற்சி நிலையங்களை நேரடியாக ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், போதுமானதாக இருக்கிறதா என்றும், ஒவ்வொரு தொழில் பயிற்சி நிலையத்திலும், மாணவர்களுக்கு தேவையான இடவசதி, குடிநீர் வசதி, ஆய்வக வசதி தேவையான அளவில் இருக்கிறதா என ஆய்வு செய்து, எந்தந்த தொழில் பயிற்சி நிலையங்களில் என்னென்ன தேவைகள் இருக்கின்றது என்பதை முழுமையாக கணக்கெடுப்பு செய்து, அந்த அறிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நோக்கம். வருங்காலங்களில் இளைஞர்களுக்கு ழுமுமையாக வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்பதுதான் இந்த அரசின் குறிக்கோள் ஆகும். தொழில் பயிற்சி நிலையங்களில் படிக்ககூடிய மாணவர்கள், இரண்டாண்டு காலம் பயிற்சி முடித்த உடனே, அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் SKILL DEVELOPMENT என்ற துறையை உருவாக்கி உள்ளார்கள். அந்த துறையின் மூலமாக இரண்டாண்டு காலம் பயிற்சி முடித்தவர்களுக்கு, அரசு துறை மற்றும் தனியார் துறைகளுக்கு வேலைக்கு சென்றாலும், அவர்களுக்கு மேலும், ஒரு பயிற்சி வழங்கினால் நிச்சயமாக எல்லா நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் இந்த அரசின் நோக்கமாகும். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ளது. தற்போது, டெய்லரிங், பேஷன் டெக்னாலாஜி, கார்மெண்ட்ஸ் போன்ற தொழில்களுக்கு போட்டிகள் அதிகமாக உள்ளது.
இதுபோன்று தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பினை உருவாக்க கூடிய புதிய வகுப்புகள் அறிமுகப்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கட்டிட வசதி இல்லை என்றால், புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒவ்வொரு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு குறைந்த பட்சம் 1000 மாணவர்களை சேர்த்து, தமிழ்நாட்டில் 1 இலட்சம் மாணவர்களை உருவாக்கி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள 90 தொழிற் பயிற்சி நிலையங்களை நேரடியாக ஆய்வு செய்து, தேவையான கட்டிட வசதி, குடிநீர் வசதி, ஆய்வக வசதிகளை பூர்த்தி செய்து, மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, அவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பினை பெற்று தருவதுதான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும். எதிர் காலத்தில் இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை மாற்றி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 40 சதவீதம் அளிக்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பெண்களுக்கு 33 சதவீதம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தார்கள். ஆனால் தற்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 40 சதவீதம் வேலை வாய்ப்புகள் வழங்க ஆணையிட்டு உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 150 நாட்களில் 202 திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள். ஆகவே, மாணவர்கள் முறையான பயிற்சி பெற்று எதிர் காலத்தில் சிறந்த வல்லுநர்களாக வர வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்வாய்வில், மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குநர் திருமதி.து.அமலா ரெக்ஸிலின், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்கள் திருமதி.மோ.ஸ்டெல்லாமேரி, திருமதி ஆர்.கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.