Close

The Hon’ble Prime Minister – Beneficiaries Meet

Publish Date : 01/06/2022
.

செ.வெ.எண்:-61/2022

நாள்:31.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள், நலத்திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடல், 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடிக்கும் அதிகமான நிதி மின்னணு பரிவர்த்தனை முறையில் வழங்குதல் மற்றும் நலிவுற்றோர் நலன் குறித்த கருத்தரங்கம் – நேரடி நிகழ்ச்சியை இணைய வழியாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள் மற்றும் பயனாளிகள் பார்வையிட்டனர்.

மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள், நலத்திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடிக்கும் அதிகமான நிதி மின்னணு பரிவர்த்தனை முறையில் வழங்குதல் நிகழ்ச்சி மற்றும் நலிவுற்றோர் நலன் குறித்த கருத்தரங்கம் இமாச்சலபிரதேசம் மாநிலம், சிம்லாவில் இன்று(31.05.2022) நடைபெற்றது.

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டம், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் மகப்பேறு உதவித்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் தாக்கம் குறித்து, பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பல்வேறு மாநிலங்களில் உள்ள பயனாளிகளுடன் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாகவும் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின்போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் 11-வது தவணையாக ரூ.21,000 கோடி தொகையை பிரதமர் விடுவித்தார்.

இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை இணைய வழியாக பார்வையிடும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகள், விவசாயிகள், சுயஉதவிக்குழுவினர், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டு, நேரடி ஒளிபரப்பை இணைய வழியாக பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியின் மூலம் பயனடைந்த பயனாளிகளான, பாரதப் பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.120.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிப் பெற்று பயனடைந்த 15 பயனாளிகள், ரூ.40 இலட்சம் கடனுதவி பெற்ற 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த மகளிர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்தனர். கடனுதவிகளை சிறப்பாக பயன்படுத்தி தொழில் வளத்தினை பெருக்கி அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், முன்னோடி வங்கி மண்டல மேலாளர் திரு.அருணாச்சலம் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.