The Hon’ble Rural Development – Food and Civil Supply ministers – Cooperative Festival
செ.வெ.எண்:-38/2024
நாள்:-17.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்டு 4,636 பயனாளிகளுக்கு ரூ.44.53 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினர்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரி கூட்ட அரங்கத்தில் இன்று(17.11.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிழ்கள் மற்றும் கேடயங்கள், 4,636 பயனாளிகளுக்கு ரூ.44.53 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினர். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, மகளிர் சுயஉதவிக்குழு கடனாக(116 குழுக்கள்–1,426 பயனாளிகள்) ரூ.9.33 கோடி, கே.சி.சி.பயிர்க்கடனாக 1,782 பயனாளிகளுக்கு ரூ.26.71 கோடி, கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக்கடன் 307 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி, மாற்றுத்திறனாளிகள் கடன் 17 பயனாளிகளுக்கு ரூ.9.00 இலட்சம், சிறு வணிகர்கள் கடன் 26 பயனாளிகளுக்கு ரூ.29.00 இலட்சம், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் வாயிலாக, மகளிர் சுயஉதவிக்குழு கடன்(76 குழு-913 பயனாளிகள்) ரூ.5.55 கோடி, மாற்றுத்திறனாளிகள் கடன் 36 பயனாளிகளுக்கு ரூ.17.00 இலட்சம், கைம்பெண்கள் கடனுதவி 20 பயனாளிகளுக்கு ரூ.9.00 இலட்சம், சிறுவணிகக் கடனுதவி 104 பயனாளிகளுக்கு ரூ.40.00 இலட்சம், நாட்டுப்புறக் கலைஞர்கள் கடன் 5 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம், என ஆக மொத்தம் 4,636 பயனாளிகளுக்கு ரூ.44.53 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
இந்திய அரசின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கூட்டுறவு சங்கம், ஒரு பள்ளிக்கூடம், ஒரு ஊராட்சி அலுவலகம் ஆகியவை இன்றியமையாத ஒன்றாகும் என வலியுறுதித்தியவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மாண்புமிகு திரு.ஜவஹர்லால்நேரு அவர்கள் ஆவார். அவரது நினைவினை போற்றும் விதத்தில் அவரது பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு ‘கூட்டுறவு வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு கொள்கைகளையும், செயல்பாடுகளையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விழாவாக 71 வது ஆண்டு அனைத்திந்திய கூட்டுறவுவார விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றது முதல், எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள்.
டாக்டர் கலைஞர் அவர்கள் 2006–ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பெற்ற பிறகு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தார். விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். அந்த வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரி இதுவரை ரூ.100.00 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, எஞ்சியுள்ள பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 2022-2023 கல்வி ஆண்டு முதல் கல்லூரி வாடகைக் கட்டடத்தில் துவங்கப்பட்டு தற்போது முதலாம் ஆண்டு 636 மாணவர்கள், இரண்டாம் ஆண்டு 252 மாணவர்கள், மூன்றாம் ஆண்டு 223 மாணவர்கள் என 1,111 மாணவர்கள் மற்றும் 35 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்களில் மாணவர்களையும் இடம்பெற செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகள், மகளிர், மாணவ, மாணவிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில், நகைக்கடன், சுயஉதவிக்குழுக் கடன், தொழில் கடன், உரம், டிராக்டர், மளிகைப்பொருட்கள் என பன்முகத்தன்மையுடன் கூட்டுறவுத்துறை செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரம், விலை குறைவு, நம்பிக்கை என கூட்டுறவுத்துறையை மேம்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கூட்டுறவே நாட்டுயர்வு. எனவே கூட்டுறவை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களால் கடன் பெறப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க, அதனைச் செயல்படுத்திடும் முகத்தான் தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு 01.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 12,55,233 பயனாளிகளுக்கு ரூ.4818.88 கோடி அளவிற்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், 53,899 பயனாளிகளுக்கு ரூ.193.77 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி தொடர்பாக 3861 குழுக்களைச் சார்ந்த 35246 நபர்களுக்கு ரூ.87.36 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் – 2021-ன் படி, திண்டுக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள் 45,145 நபர்களுக்கு ரூ.525.90 கோடி கடன்தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் அனைத்து துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் இருக்கின்ற விவசாயிகளுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் நம்முடைய அரசின் திட்டங்களை திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்ப்பதிலும், கூட்டுறவுத் துறையின் மூலமாக இந்த அரசு கொண்டு வருகின்ற அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்ஆணையிட்டு அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு என்றென்றும் ஆதரவாக, உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற வேண்டும், பெண்கள் சமுதாயத்தில் எல்லா நிலை பெறவேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டது தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான். கலைஞர் அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சார்பில் பயிர்க்கடன் வழங்கப்பட்டதில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிகளவு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடனுதவி ரூ.12.00 இலட்சத்திலிருந்து உயர்த்தப்பட்டு தற்போது ரூ.60.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. விவசாய கடன், சிறுவணிக கடன் என பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் சுமார் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 2 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், ஒரு தொழிற்பயிற்சி நிலையம், பழனியில் சித்தா மருத்துவக் கல்லுாரி, கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மேலாண்மை இணையம் தொடங்கிட ரூ.200 கோடி நிதி என 7 கல்வி நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
விழாவில், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதி ரூ.46.89 இலட்சம், கூட்டுறவு கல்வி நிதி(2023-2024 ஆண்டு) ரூ.31.26 இலட்சம், கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப்போட்டி , பேச்சு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி, கூட்டுறவு சங்கங்கள், பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் என 68 நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் வழங்கினர்.
திண்டுக்கல் மண்டல கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ், மொத்தம் 274 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கிராமபுற அளவில் 196 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 4 நகர கூட்டுறவு வங்கிகள், 4 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், 6 தொடக்கக் கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 45 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், ஒரு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, 8 தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள், ஒரு மாவட்ட கூட்டுறவு அச்சகம், ஒரு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், 4 மாணவர் கூட்டுறவு பண்டகசாலை, ஒரு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் மூலம் ஏழை, எளிய விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் மூலம் பலவித கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.v
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகள் நலம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வேளாண்மைத் துறையை உழவர் நலத்துறையாக மாற்றிய பெருமை நமது முதலமைச்சரையே சாரும். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-2023ஆம் ஆண்டில் 68 கிராமங்களில் 8586 விவசாயிகளுக்கு ரூ.104.77 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2023-2024ஆம் ஆண்டில் 60 கிராமங்களில் 11,004 விவசாயிகளுக்கு ரூ.129.61 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 57,716 விவசாயிகளுக்கு ரூ.832.47 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், புதிதாக சேர்க்கப்பட்ட 9,968 உறுப்பினர்களுக்கு ரூ.136.35 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், இதுவரை 22,261 விவசாயிகளுக்கு ரூ.344.98 கோடி அளவிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், புதிதாக சேர்க்கப்பட்ட 3,137 உறுப்பினர்களுக்கு ரூ.50.28 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை விவசாய கடன்களுக்கு மட்டுமே வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆடு வளர்த்தல், மாடு வளர்த்தல், பன்றி வளர்த்தல் போன்ற கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பிற்கும் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் இல்லாதவர்களும் கால்நடை பராமரிப்பிற்காக அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொள்ளலாம். கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 16,732 நபர்களுக்கு ரூ.97.01 கோடி கடனும், நடப்பாண்டு இதுவரை 6,795 நபர்களுக்கு ரூ.42.87 கோடி அளவிற்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 1989 ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களை தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கினார்கள்.பெண்களுக்கான முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகவும் டாக்டர் கலைஞர் அவர்களால் சிந்தித்து உருவாக்கப்பட்டதுதான் இந்தத் திட்டம். அந்த அளவில் இது சிறப்பானதொரு திட்டமாக இன்று இந்திய அளவில் எல்லோரும் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 2,470 குழுக்களில் உள்ள 29,640 நபர்களுக்கு ரூ.166.09 கோடி கடனும், நடப்பாண்டு இதுவரை 1,377 குழுக்களில் உள்ள 16,524 உறுப்பினர்களுக்கு ரூ.99.05 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நில மேம்பாடு செய்வதற்கு, டிராக்டர் வாங்குவதற்கு, தோட்டத்தில் பைப்லைன் அமைப்புதற்கு மத்திய கால முதலீட்டுக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 568 நபர்களுக்கு ரூ.20.89 கோடி கடனும், நடப்பாண்டு இதுவரை 148 நபர்களுக்கு ரூ.5.53 கோடி மத்திய கால முதலீட்டுக்கடனும் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது குடும்ப தேவைகளுக்காக கூட்டுறவு நிறுவனங்களில் நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்றுக்கொள்ள வழிவகைகள் உள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2,15,429 நபர்களுக்கு ரூ.1,670.11 கோடி கடனும், நடப்பாண்டு இதுவரை 1,42,114 நபர்களுக்கு ரூ.1,204.55 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 663 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.265.43 இலட்சம் கடனும், நடப்பாண்டு இதுவரை 331 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.163 இலட்சம் கடனும் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 1383 நபர்களுக்கு ரூ.915.57 இலட்சம் டாம்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 230 நபர்களுக்கு ரூ.249 இலட்சம் டாம்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 1466 நபர்களுக்கு ரூ.1,217.17 இலட்சம் டாப்செட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 81 நபர்களுக்கு ரூ.74.00 இலட்சம் டாப்செட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தாட்கோ மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 292 நபர்களுக்கு ரூ.164.92 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 590 நபர்களுக்கு ரூ.298.00 இலட்சம் தாட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது.
நடைபாதை வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்போர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 4097 நபர்களுக்கு ரூ.1803.95 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 1647 நபர்களுக்கு ரூ.727.00 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் கடனாக கடந்த ஆண்டு 144 பெண்களுக்கு ரூ.132.5 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 121 பெண்களுக்கு ரூ.94.00 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கங்களின் அடிப்படை செயல்பாடான கடன் வழங்கல் மட்டுமல்லாது வேளாண் விளைபொருட்களை பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல், வேளாண் கருவிகள், கிடங்குகள், பதப்படுத்தும் வசதிகள், சரக்குந்துகள், சந்தை கூடங்கள் போன்றவற்றை நிறுவி விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுதல் மற்றும் கிராமப்புறங்களில் இணைய சேவை வழங்குதல் போன்ற பல்வேறு கடனல்லாத வேறு விதமான வணிக நடவடிகக்கைகள் மேற்கொள்வதன் மூலம் அச்சங்கங்களின் வணிகத்தை பெருக்கி, கூடுதல் வருவாய் ஈட்டச்செய்து அதன் மூலம் சங்க உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்கத்துடன் திண்டுக்கல் மண்டலத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 177 கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் கடந்த ஆண்டு 1,38,585 சேவைகள் வழங்கப்பட்டு ரூ.61.67 இலட்சம் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 52,350 சேவைகள் வழங்கப்பட்டு ரூ.25.49 இலட்சம் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக செயல்படும் 8 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 20 சதவீதம் தள்ளுபடியுடன் குறைந்த விலையில், சிறந்த மற்றும் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.75.61 இலட்சத்திற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, நடப்பாண்டு இதுவரை ரூ.10.29 இலட்சத்திற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 5 சதவீதம் வட்டியில் ரூ.50,000 வரை 350 நாட்களில் திருப்பி செலுத்தும் வகையில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 240 கைம்பெண்களுக்கு ரூ.109.75 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 97 கைம்பெண்களுக்கு ரூ.45.00 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விலையேறும்போது விற்பனை செய்ய ஏதுவாக தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு 450 நபர்களுக்கு ரூ.1863.41 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 176 நபர்களுக்கு ரூ.121.00 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த ஆண்டு 81 நபர்களுக்கு ரூ.769.27 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 44 நபர்களுக்கு ரூ.691 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு அடமானத்தின் பேரில், கடந்த ஆண்டு 133 நபர்களுக்கு ரூ.808.84 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 73 நபர்களுக்கு ரூ.420 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணைசாரா கடனாக கடந்த ஆண்டு 985 நபர்களுக்கு ரூ.811.37 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 639 நபர்களுக்கு ரூ.621 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு கடந்த ஆண்டு 55 பெண்களுக்கு ரூ.167.85 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 33 பெண்களுக்கு ரூ.108.00 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள், உயிரி உரம் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்தி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோட்டில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சொந்தமான இடத்தில் அந்நிறுவனத்தால் உயிரி உரம் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி அலகு ரூ.125 இலட்சம் மதிப்பீட்டிலும், 1000 மெ.டன் அளவு உற்பத்தித்திறன் கொண்ட நுண்ணூட்டச்சத்து கலப்புஉர அலகு ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டு, உற்பத்தி மற்றும் விநியோகபணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மற்றும் பழனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு 17,799 லிட்டர் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்பட்டு ரூ.3.87 இலட்சம் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 7814 லிட்டர் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்பட்டு ரூ.0.69 இலட்சம் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.
வேடசந்தூர் வட்டாரத்திலுள்ள பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தினால் நடத்தப்படும் பெட்ரோல் டீசல் விற்பனை மூலம் கடந்த ஆண்டு 487.85 கிலோ லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு, ரூ2.43 இலட்சம் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை 297.807 கிலோ லிட்டர் விநியோகம் செய்யப்பட்டு ரூ.1.17 இலட்சம் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.
பழனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மூலம் விவசாயிகளின் கொப்பரையை ஏலம் நடத்தி, சேவை புரிந்து வருகிறது. கடந்த ஆண்டு 107.054 டன் கொப்பரை ஏலம் விடப்பட்டு, ரூ76.90 இலட்சமும், நடப்பாண்டு இதுவரை 65.942 டன் கொப்பரை ஏலம் விடப்பட்டு, ரூ63.71 இலட்சமும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களிலும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் 196 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 3 நகர கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் 45 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு அமைப்புகளில் அங்கத்தினர்களாக உள்ள விவசாய பெருங்குடிமக்கள், சிறு வியாபாரிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையின உறுப்பினர்கள் மற்றும் நகைக்கடன் பெறும் இணை உறுப்பினர்கள் விரைவாகவும், எளிதாகவும் கடன் பெற்றிட இணையவழி கடன் வழங்கும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைய தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் காலவிரயமின்றி உடனடி வங்கிச்சேவை பெறுவது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளவும், சேவைகளைப் பெறவும், நிர்வாகத்தினை செம்மைப்படுத்த அலுவலர்கள் களப்பணிகளை மேற்கொள்ளவும் “கூட்டுறவு செயலி” உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு துரிதசேவை வழங்கவும், களஆய்வு அறிக்கைகளை உடனுக்குடன் வழங்கவும் அதன் நிவர்த்தி அறிக்கைகளை உடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து மக்களின் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த தற்போது பல்நோக்கு சேவை சங்கங்களாக உருவாகி வருகின்றன. பல்நோக்கு சேவைகள் வழங்குவதற்கு ஏதுவாகவும் சேவைகள் அனைத்து தரப்பினரையும் விரைவில் சேரும் வண்ணம் திண்டுக்கல் மண்டலத்தில் 7 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உட்கட்டமைப்பு நவீனமயமாக்க மற்றும் 6 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களை சென்றடையவும், அனைத்து பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியிலேயே கூட்டுறவுச் சேவைகள் பெறவும் திண்டுக்கல் மண்டலத்தில் 5 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கிளைகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 சுதந்திரதினவிழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்“ என அறிவித்தார்கள். அதன்படி, திண்டுக்கல் மண்டலத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 25 முதல்வர் மருந்தகங்கள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை நிலையம், பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடி, மக்கள் சந்தை திண்டுக்கல் மண்டலத்தில் பொதுமக்கள் குறைந்த விலையில் நுகர்பொருட்கள், காய்கறிகள் பெற்றுபயன் பெறும் வகையில் 10 சில்லறை விற்பனை நிலையங்கள், 10 பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடிகள் மற்றும் 8 மக்கள் சந்தைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 6,79,409 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகை ரொக்கம் ரூ.1000 வீதம் ரூ.67.94 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புக்கு ரூ.2.24 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாய விலைக் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 780 முழு நேர நியாய விலைக்கடைகளும், 446 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. இதில் வாடகை கட்டடத்தில் மட்டும் 184 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும், நடப்பாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 285 புதிய நியாய விலைக்டைகளுக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியிலேயே குடிமைப்பொருட்கள் பெற ஏதுவாக புதிதாக 64 முழுநேர நியாயவிலைக்கடைகளும், 173 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 237 நியாயவிலைக் கடைகள் செயல்பட அனுமதிபெறப்பட்டுள்ளது. அதில் 63 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 167 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் ஆகமொத்தம் 230 நியாயவிலைக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாதந்தோறும் 6,62,266 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி 10,919 மெட்ரிக் டன், சர்க்கரை 824 மெட்ரிக்டன், கோதுமை 204 மெட்ரிக்டன், துவரம் பருப்பு 534 மெட்ரிக்டன், பாமாயில் 534 கிலோ லிட்டர், மண்ணெண்ணெய் 36 கிலோ லிட்டர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழும், FSSAI உரிமமும் பெறப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மண்டலத்தில் 193 நியாயவிலைக் கடைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. திண்டுக்கல் மண்டலத்தில் இதுவரை 510 எண்ணிக்கையிலான கடைகள் பொலிவுறச் செய்யும் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோர் நலனைக் கருத்தில் கொண்டு, நியாயவிலைக் கடைகளில் 5 கிலோ மற்றும் 2 கிலோ FTL சிலிண்டர்கள் விற்பனை துவங்கப்பட்டது.
திண்டுக்கல் மண்டலத்தில் 164 நியாயவிலைக் கடைகளில் QR code மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றுள்ளார்கள். திண்டுக்கல் மண்டலத்தில் செயல்படும் 1226 நியாயவிலைக் கடைகள் மற்றும் 100 சிறுகூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் மாதம் ஒன்றிற்கு ரூ.110 லட்சம் அளவில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு 01.07.2021 முதல் நாளது தேதி வரை ரூ.4433.67 இலட்சம் பொதுவிநியோகத் திட்டமானியம் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மண்டலத்தில் கடந்த ஆண்டில் காலியாக இருந்த 317 விற்பனையாளர் பணியிடங்களும், 2 கட்டுநர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 64 விற்பனையாளர் பணியிடங்களும், 12 கட்டுநர் பணியிடங்களும் நிரப்பப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்விழாவில், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர்(கூ.பொ.) திருமதி இரா.சுபாஷினி, திண்டுக்கல் மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் திரு.ரா.ஆனந்த், வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) திரு.எஸ்.ராஜா, கூட்டுறவு துணைப்பதிவாளர்கள் திருமதி பி.உஷாநந்தினி,திருமதி இரா.வெங்கட்லட்சுமி, திரு.இரா.அன்புக்கரசன், திருமதி பா.கௌரிமீனா, திருமதி தொ.ரா.வசந்தி, திரு.இரா.தே.பவணந்தி, திண்டுக்கல் மாவட்ட பால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் பொதுமேலாளர் திருமதி க.வாணிஸ்வரி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் திரு.ஜி.விநாயகமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.ஜெகவீரபாண்டியன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் திரு.ம.செல்வக்குமார், திரு.கு.அன்பரசு, திரு.நா.மதி மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.