Close

The Hon’ble Rural Development Minister – Free Patta – Development Works

Publish Date : 01/02/2024
.

செ.வெ.எண்:-72/2024

நாள்:31.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 2240 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கி, எஸ்.பாறைப்பட்டியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம், அய்யம்பாளையம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்று(31.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மொத்தம் 2240 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி, எஸ்.பாறைப்பட்டியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமபுற மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திடவும், பொதுமக்களின் குடிநீர், அத்தியாவசிய பொருட்களின் தேவை போன்றவற்றை பூர்த்தி செய்வதற்காக, தொடர்ந்து அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக எதிர்கால தேவையினை கருத்தில் கொண்டும், மக்கள் தொகையின் அடிப்படையிலும், வளர்ச்சித்திட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏழை, எளிய பொதுமக்களின் பொருளாதார நிலையை உயரத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு குடியிருப்புகள் வழங்கும் திட்டம், இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டன. தமிழகம் முழுவதும் 24 இலட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

அந்தவழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆதிதிராவிடர், ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், குடியிருப்புகளை பழுது பார்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் இதுவரை 300 கோடி பேருந்து பயணத்தை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.

விளிம்பு நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கு சுயமாக குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இலவச வீடு வழங்கும் திட்டம், இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழக மக்களின் பொருளாதார ஏற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், குடியிருப்பு வசதியின்றி விளிம்பு நிலையில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகள் வழங்கும் வகையில் தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்றையதினம் திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 217 பயனாளிகளுக்கு ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலும், ஆத்துார் வட்டத்தில் 530 பயனாளிகளுக்கு ரூ.3.96 கோடி மதிப்பீட்டிலும், நிலக்கோட்டை வட்டத்தில் 1503 பயனாளிகளுக்கு ரூ.4.50 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 2,240 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பத் திட்டத்தில் தினசரி சம்பளம் ரூ.300 வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர்(ஜல்ஜீவன்) வழங்கும் திட்டத்தின் மூலம் எஸ்.பாறைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்குவதற்காக ரூ.2.90 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணிக்கு இன்று(31.01.2024) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காமராஜர் நீர்த் தேக்கம் பகுதியில் நீர் உறிஞ்சு கிணறு அமைத்தல், 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், நீர் உறிஞ்சு கிணற்றிலிருந்து தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் கொண்டு செல்ல மோட்டார் அறை மற்றும் குழாய் இணைப்பு அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் பணிகளை 3 மாதங்களில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எஸ்.பாறைப்பட்டிக்கு உட்பட்ட கே.ராமநாதபுரம், கெண்டையப்பட்டி, கெப்பகோலப்பட்டி, பாறைப்பட்டி, ஆர்.வி.எஸ்.பண்ணை, தாதனுார், பண்ணம்பட்டி ஆகிய 7 குக்கிராமங்களில் 1319 குடியிருப்புகளில் வசிக்கும் 7,128 பொதுமக்கள் பயன்பெறுவர்.

இது மக்களின் அரசு, இது உங்களின் அரசு, அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த, இந்த அரசுக்கு என்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்ட பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து அட்டை, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.05 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் திரு.ப.க.சிவகுருசாமி, திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், திருமதி ரெஜினாநாயகம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சுப.கமலக்கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சாமிநாதன், அய்யம்பாளையம் பேரூராட்சித் தலைவர் திருமதி அ.ரேகா, வருவாய் வட்டாட்சியர்கள் திரு.மீ.வடிவேல்முருகன், திரு.சோ.செழியன், திரு.தனுஷ்கோடி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.