Close

The Hon’ble Rural Development Minister – (Grama Saba)

Publish Date : 25/11/2024
.

செ.வெ.எண்:-58/2024

நாள்:-23.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி.இ.ஆ.ப, அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2024 அன்று நடைபெற இருந்த உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் இன்று (23.11.2024) நடைபெற்றது.

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மகளிர் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் தருமபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தார்கள்.

பிள்ளையார்நத்தம், ஆலமரத்துப்பட்டி, காந்திகிராமம், செட்டியப்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய கிராமங்கள் மிக நெருங்கிய தொடர்புடைய கிராமங்களாகும். காரணம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சேவை செய்கின்ற மனப்பான்மை உண்டு. பிள்ளையார்நத்தம் கிராமம் ஒரு முன் உதாரமாண கிராமமாகும்.

அனைத்து பொதுமக்களுக்கும் வீடு, முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் 1.18 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் முதலமைச்சர், இது உங்கள் அரசாங்கம், யார் யாருக்கு அரசு திட்டங்கள் சேரவில்லை என்பதை மிகவும் கண்காணித்து, அந்த திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைவருக்கும் சென்றடையும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி கட்டங்களை புதுப்பிப்பதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேருந்துகளின் எண்ணிக்கைகளை உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இக்கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் இதுபோன்ற கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து, பொதுவான கோரிக்கைள் தொடர்பாக மனுக்கள் அளிக்க வேண்டும். அந்த மனுக்களை மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து, நிறைவேற்ற வாய்ப்ப ஏற்படும். தங்கள் கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

இக்கிராம சபைக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் துய்மைப்பணியாளர்கள் மற்றும் திறன்பட செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்

இக்கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஜ.நாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் திரு.அன்புகரசு, ஆத்துர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமதி ம.ஹேமலதா மணிகண்டன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.உலகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.