The Hon’ble Rural Development Minister-KKI-Authoor

செ.வெ.எண்:-33/2025
நாள்:12.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 431 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சீவல்சரகு ஜெய்னி கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 431 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை இன்று(12.06.2025) வழங்கினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சச்சிதானந்தம், உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் ஜாதி, மதம் வேறுபாடு இன்றி செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லை என்ற நிலை யாருக்கும் இருக்கக்கூடாது, அதை அகற்றிட வேண்டும், அதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 80 சதவீதம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,700 கட்ட அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை சுமார் 3,500 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 20 ஆண்டுகளான பழுதடைந்த வீடுகளை பழுது பார்க்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் பழுதடைந்த வீடுகளை பழுது பார்க்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிரப்பித்தார். தற்போது வரை ஒரு இலட்சம் வீடுகள் பழுது சீரமைக்கப்பட்டு பணிகள் முடிக்கபட்டுள்ளன.
மக்களுக்கு என்ன தேவைகள் என்பதை அறிந்து அவர்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் அரசின் கடமையாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 20,000 கி.மீட்டர் அளவிற்கு தார்ச்சாலை பணிகள் நடைபெற்றுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமத்துவம், சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காகவும், அனைவரையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையுடன் இருந்து செயல்பட வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தட்சணாமூர்த்தி, திரு.பொ.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.