Close

The Hon’ble Rural Development Minister-Mini Bus

Publish Date : 17/06/2025
.

செ.வெ.எண்:-59/2025

நாள்:-17.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று(17.06.2025) தொடங்கி வைத்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சச்சிதானந்தம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், வணக்கத்திற்குரிய திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் சுமார் 33 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட வகையில் 29 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டன. விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை பேருந்துகளில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதித்தார். கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் போக்குவரத்து சேவையை ஏற்படுத்தும் வகையில் மினி பேருந்து திட்டத்தை கொண்டுவந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். தற்போது இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, துாரக்கட்டுப்பாடுகளை மாற்றி மீண்டும் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்கள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.கண்ணன், சிற்றுந்து உரிமையாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.