Close

The Hon’ble Rural Development Minister – Program

Publish Date : 08/02/2024
.

செ.வெ.எண்:-19/2024

நாள்:07.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் முடிவுற்று திட்டப்பணிகளை துவக்கி வைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.42.38 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(07.02.2024) திறந்து வைத்து, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை தலா 8 கிராம் தங்க நாணயத்தினை வழங்கினார்.

இந்த விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

பெண்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. குடும்பத்தலைவிகள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் 1.16 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்பட்சத்தில் அவர்களுடைய விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 18 இலட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

முதியோர் உதவித்தொகை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு தகுதியிருப்பின் அவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் அடிப்படைக்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சுகாதாரமான, காற்றோட்டமான வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என அரசின் திட்டங்களின் பயன்களை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோட்டை ஊராட்சியில் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடை கட்டடம், தேவாரப்பன்பட்டி ஊராட்சியில் ரூ.5.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பால் கொள்முதல் நிலையம், சித்தரேவு ஊராட்சி, கதிர்நாயக்கன்பட்டியில் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டடம், சித்தரேவில் ரூ.11.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கட்டடம் என மொத்தம் ரூ.42.38 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(07.02.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில், மக்களுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்காக, பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, தேவாரப்பன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட பால் கொள்முதல் நிலையத்தினை திறந்து வைத்து, மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினை 40 பயனாளிகளுக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, சித்தரேவு ஊராட்சியில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை தலா 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் 40 கிராம் தங்க நாணயத்தினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், துணைப்பதிவாளர், பொது வினியோகத்திட்டம் திரு.இரா.அன்புக்கரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.