The Hon’ble Rural Development Minister Program

செ.வெ.எண்:-24/2023
நாள்: 11.02.2023
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட கிடங்குகளுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி வைத்தார்
திண்டுக்கல் மேற்கு வட்ட கிடங்கு கட்டுமான பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சுள்ளெறும்பு கிராமத்தில் திண்டுக்கல் மேற்கு வட்ட கிடங்கு பணிகள் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(11.02.2023) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் கலந்து கொண்டு கிடங்கு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்து, புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்கள். நமது மாவட்டத்தில் திண்டுக்கல் வடக்கு வட்டம் மற்றும் குஜிலியம்பாறை ஆலம்பாடி கிராமத்தில் புதிய வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்கள். திண்டுக்கல் மேற்கு தாலுகா பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருட்கள் வழங்குவதற்கு இந்த புதிய கிடங்கு பயனுள்ளதாக இருக்கும், குஜிலியம்பாறை பகுதியில் 34,000 குடும்ப அட்டைகளுக்கு குடிமை பொருட்கள் வழங்க புதிதாக கட்டப்படும் குடோன் பயனுள்ளதாக இருக்கும். இப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட குடுமைப் பொருட்கள் விரைவில் சென்று வழங்க வசதியாக இருக்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்குவதை ரூ.20 லட்சம் வரை உயர்த்தி உள்ளார்கள். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள கிராம சாலை வசதிகளை மேம்படுத்திட ரூபாய் 4000 கோடி ஒதுக்கீடு செய்து சாலை பணிகளை துவக்கி வைத்துள்ளார்கள். கிராமப்புறங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து திட்டங்களை உருவாக்கிட வேண்டும். திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியை பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பன்றிமலையில் புதிதாக ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைக்க அனுமதி அளித்துள்ளார்கள். அடுத்த ஆண்டு சுள்ளெறும்பு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூபாய் ஒரு கோடி 50 லட்சம் அளவிலான திட்டங்களை வழங்கியுள்ளார். மேலும் முருநெல்லிகோட்டை பகுதியில் ரூபாய் 45 லட்சம் செலவில் பல்நோக்கு சமுதாய கூடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ரெட்டியார்சத்திரம் பகுதிக்கு என ரூபாய்.108 கோடி மதிப்பீட்டில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் புதிய குழாய்கள் அமைக்கப்பட்டு கூடுதல் தண்ணீர் வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு இப்பகுதிக்கு கூடுதல் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு அனைவரும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என பேசினார்
இந்நிகழ்ச்சியில், நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் திருமதி ரா.மெர்லின் டாரதி, ஒன்றியக்குழு தலைவர் திரு.சிவக்குருசாமி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ரமேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.திருமலைச்சாமி, திருமதி வேதா, முக்கிய பிரமுகர்கள் திரு.சத்தியமூர்த்தி, நுகர் பொருள் வாணிப கழக கண்காணிப்பாளர் திரு.பாலன், உதவி பொறியாளர் திரு.சந்திரபோஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.