The Hon’ble Rural Development minister – Samuthaya valaikkappu – Function

செ.வெ.எண்:- 08/2025
நாள்:-04.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சின்னாளப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கி, 277 பயனாளிகளுக்கு ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி விஜய மஹாலில் இன்று(04.03.2025) நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கி, ஆத்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை மற்றும் ரெட்டியார்சத்திரம் ஆகிய வட்டாரங்களில் 277 பயனாளிகளுக்கு ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து தெடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனையே மிக முக்கியமான நோக்கமாக கொண்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஆத்துார் மற்றும் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பாக 286 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரண்டு வட்டாரங்களில் உள்ள குழந்தைகள் மையங்கள் மூலமாக சுமார் 1,193 கர்ப்பிணிகள், 1,258 பாலுாட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 16,662 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
பெண்மைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. தாய்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வரப்பிரசாதம் மற்றும் மறுபிறப்பாகும். தாய்மை ஒரு பெண்ணுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தாய்மை என்பது இடைவிடாத வேலை. ஆனாலும், எந்த ஒரு பெண்ணும் தாய்மையை சுமையாகக் கருதுவதே இல்லை. பத்து மாதங்களும் தன் குழந்தையை சுமப்பதை ஒரு அலாதியான சுகமாகவே நினைக்கிறாள்.
ஆரோக்கியமான குழந்தை உருவாகவும், சுகப்பிரசவம் நிகழவும், கருவுற்றிருக்கும் தாயின் உடல் மற்றும் மனநிலை நல்ல நிலையில் இருப்பது அவசியம். பாதுகாப்பான தாய்மைக்கு, கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள், கர்ப்ப கால கவனிப்புகள், பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதன்மூலம் அறிவுள்ள ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.
இதற்கு, பெண்கள், திருமணத்திற்கு முன்பே அதாவது, வளர் இளம் பருவத்திலேயே ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கியம் மற்றும் அக்கருவினை சுமக்கும் தாயின் ஆரோக்கியம் மேம்பட தேவையானவற்றை கவனிக்க வேண்டியது கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் மிகப்பெரிய கடமையாகும்.
அந்த வகையில், கர்ப்பிணி பெண்களுக்கு மன மகிழ்வை ஏற்படுத்தும் வளைகாப்பு விழா அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனையே மிக முக்கியமான நோக்கமாக கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயல்படுகிறது. இத்துறையில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் மற்றும் மூன்றாம் பாலினர்களுக்காக பல திட்டங்களும் சட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.
பெண் கல்வியின் முக்கியத்தை உணர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பட்டம் படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூ.50,000 நிதி உதவியும், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.25,000 நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் விதவையரின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோர்களுக்கு உதவிடும் வகையில் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய 4 வகையான திருமண நிதி உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2024-2025 ஆம் நிதியாண்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு 477 பயனாளிகளுக்கு தங்க நாணயங்கள்(8 கிராம்) தலா ரூ.60,858 மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கமும், திருமண நிதியுதவி ரூ.1.82 கோடி நிதி உதவியும் என மொத்தம் ரூ.4.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் பெண்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக உள்ளது. பெண்கள் உயர்கல்வி படித்தால் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது. அரசு வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது.
பள்ளிக்குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெண்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் 49 பயனாளிகளுக்கு ரூ.29.82 இலட்சம் மதிப்பீட்டில் தங்கம், ரூ.18.00 இலட்சம் திருமண நிதியுதவி, வத்தலக்குண்டு வட்டாரத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.17.04 இலட்சம் மதிப்பீட்டில் தங்கம், ரூ.11.00 இலட்சம் திருமண நிதியுதவி, திண்டுக்கல் வட்டாரத்தில் 132 பயனாளிகளுக்கு ரூ.80.33 இலட்சம் மதிப்பீட்டில் தங்கம், ரூ.54.00 இலட்சம் திருமண நிதியுதவி, நிலக்கோட்டை வட்டாரத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ.24.34 இலட்சம் மதிப்பீட்டில் தங்கம், ரூ.15.50 இலட்சம் திருமண நிதியுதவி, ரெட்டியார்சத்திம் வட்டாரத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.17.04 இலட்சம் மதிப்பீட்டில் தங்கம், ரூ.10.00 இலட்சம் திருமண நிதியுதவி என மொத்தம் 277 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம், ரூ.1.08 கோடி மதிப்பீட்டி திருமண நிதியுதவி என மொத்தம் ரூ.2.77 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் திருமதி இரா.பிரதீபா, ஆத்துார் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி காலின்செல்வராணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.