The Hon’ble Rural Development Minister-Schemes-Authoor

செ.வெ.எண்:-17/2025
நாள்:-06.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.85.90 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.85.90 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(06.03.2025) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு தேவையான நியாயவிலைக்கடை, சத்துணவு மையம், நாடக மேடை, திருமண மண்டபம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்குவதற்கு குடிநீர் தொட்டிகள் ஆகிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சி, கூலம்பட்டியில் புதிய சமுதாயக்கூடம் பொதுநிதியிலிருந்து ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டிலும், புதிய பொது விநியோகக்கடை கட்டடம் கனிம வள நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலும், பாளையங்கோட்டையில் அங்கன்வாடி மையக் கட்டடம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு பணிகள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், போடிகாமன்வாடி ஊராட்சியில் நாடக மேடை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டிலும், போடிக்காமன்வாடியில் அங்கன்வாடி மையக் கட்டடம் அனைத்துக்கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திலிருந்து ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டிலும், சொக்கலிங்கபுரத்தில் உணவு தானிய கிடங்கு மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதித் திட்டத்திலிருந்து ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஆகமொத்தம் இன்றையதினம் மட்டும் ரூ.85.90 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மக்களின் வசதிக்காகத்தான் சமுதாயக் கூடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த சமுதாயக் கூடங்ளில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது நமது கடமையாகும். இந்த கடமையை நிரைவேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
அரசின் திட்டங்கள் அனைத்தும், கடைக்கோடியில் வசிக்கும் மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிருபித்துக்காட்டியுள்ளார். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சோஷியலிஷத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.
படித்த இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தட்சணாமூர்த்தி, திருமதி அருள்கலாவதி, வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.