The Hon’ble Rural Development minister – Schemes – Meeting

செ.வெ.எண்:-07/2025
நாள்:-04.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 257 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(04.03.2025) நடைபெற்ற விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 257 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
காலநிலை மாற்றங்கள், பருவ மழை பெய்ய தவறியதன் காரணமாக பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பருவமழை காலம் தவறி பெய்ததால் விவசாயிகளுக்கு சேதம் ஏற்பட்டு, விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் 2023-ஆம் ஆண்டு பருவமழை தவறியதன் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்ததன் காரணமாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு, அத்தகைய பேரிடர் காலங்களில் மக்களின் துயர் துடைக்க நிவாரண நிதி வழங்குகிறது. மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500, இறவை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 என்ற விகிதத்தில் நிதி வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையில் வேளாண்மை பயிர்களான நெல் மற்றும் மக்காச்சோள பயிர்கள் 234.64 ஹெக்டேரில் பாதிப்படைந்து அதற்கான நிவாரண நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாவட்ட முழுவதும் ரூ.30.36 இலட்சம், 384 விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நிவாரணத் தொகை செலுத்தப்படவுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இத்தொகையை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தி மகசூலை பெருக்கி பயனடைய வேண்டும்.
இன்றைய தினம், மாற்றுத்திறனாளிகள், தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி என பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியுள்ள விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் அரசு தயாராக இருக்கிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீதும், இந்த அரசு மீதும் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளனர். கேட்டதை எல்லாம் தரும் அரசாக இந்த அரசு உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இன்றைய விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 54 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.54.97 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் 176 பயனாளிகளுக்கு பயிர் இழப்பீட்டுத்தொகை ரூ.19.10 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் ரூ.20,070 மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 14 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி ரூ.1.01 கோடி மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்புப் பெட்டி ரூ.33,500 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு, நிலையான பந்தல் அமைத்தல் மானியம் ரூ.6.10 இலட்சம் மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 257 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நகர் ஊரமைப்பு துறை சார்பில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், வேளாண்மை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர்(பொறுப்பு) திரு.ஏ.டி.சிவப்பிரகாசம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.