Close

The Hon’ble Rural Development Minister – Thaliku Thangam Program

Publish Date : 01/04/2023
.

செ.வெ.எண்:-36/2023

நாள்:-19.03.2023

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் 156 பயனாளிகளுக்கு ரூ.1,45,71,648 மதிப்பிலான தங்கம் நாணயங்கள் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருமண உதவித் தொகையுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.03.2023) நடைபெற்றது

இவ்விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் கலந்து கொண்டு 156 பயனாளிகளுக்கு ரூ.1,45,71,648 மதிப்பிலான தங்கம் நாணயங்கள் மற்றும் நிதியுதவியை வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் 1989-ஆம் ஆண்டு திருமண உதவித்தொகை வழங்கக்கூடிய இந்த திட்டத்தை துவங்கினார். இடையில் கடந்த கால ஆட்சியில் இரண்டு, மூன்று ஆண்டுகள் இந்த திட்டத்தினை நிறுத்தி வைத்துள்ளார்கள். தற்போது, விதவையர் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்பு திருமணம் செய்து கெள்ளும் தம்பதியர் மற்றும் மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோர்களுக்கு உதவிடும் வகையில் 4 வகையான திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆத்தூர், வத்தலக்குண்டு, திண்டுக்கல், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 156 பயனாளிகளுக்கு ரூ.1,45,71,648 மதிப்பிலான தலா 8 கிராம் தங்க நாணயங்களும் நிதியுதவிகளும் வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண் குழந்தைகள் உயர் கல்வி பயில அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு புதுமை திட்டம் தொடங்கப்பட்டு, மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நமது பகுதியை பொருத்தவரை மூன்று பேரூராட்சி பகுதிகளுக்கும், பெண்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெரும்பாலான கிராம ஊராட்சி பகுதிகளிலும் பெண்கள் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் அறிவிக்க உள்ளார்கள். 100 நாள் வேலை திட்டத்தை பொருத்த வரை மத்திய அரசு அளித்துள்ள அளவை காட்டிலும் கூடுதலாக நாம் வேலை வழங்கி வருகிறோம். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.1 இலட்சம் கோடி வரை மாநிலத்திற்கு ஒதுக்கீடு வரப்பட்டது. தற்போது ரூபாய் 60 ஆயிரம் கோடி மட்டுமே இத்திட்டதிற்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், கூடுதலான வேலைவாய்ப்புகள் கிராம பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தினை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திடவுள்ளார்கள். 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் காலை உணவு திட்டத்தினை அறிவிக்க உள்ளார்கள். மேலும், பல்வேறு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்பட்டுள்ளது.

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். சித்தையன்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும், இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். நமது பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு கலை அறிவியல் கல்லூரிக்கு சிறப்பான கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கல்லூரி நமது திண்டுக்கல் மாவட்டதில் சிறந்த கல்லூரியாக அமையும் வகையில் ரூ.75 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. நமது ரெட்டியார்சத்திரத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிக்கும் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. திண்டுக்கலில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை தொடங்குவதங்கு பல்வேறு நடவடிக்கைகளும், இடவசதிகளும் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கி நடைபெறும். மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.விரைவில் இக்கட்டிடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளது. அதிகமான அளவில் படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது மற்றும் உயர் சிகிச்சை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பன்றிமலை ஆடலூர் பகுதி மக்களுக்கு பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், சின்னாளபட்டி பகுதியில் உள்ள மருத்துவமனை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரட்சித்தலைவர் திரு.பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி மகேஸ்வரி முருகேசன், ஆத்தூர் துணைத்தலைவர் திருமதி ஹேமலதா மணிகண்டன், வத்தலக்குண்டு ஒன்றியக்குழு தலைவர் திருமதி பரமேஸ்வரி முருகன், சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் திருமதி தீபாகனகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி பத்மபிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.புஷ்பகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.