The Hon’ble Rural Development minister-VC

செ.வெ.எண்:-64/2025
நாள்:-18.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்றக் குறியீடு கருத்தரங்கில் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சென்னையில் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் இன்று(18.06.2025) நடைபெற்ற மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்றக் குறியீடு கருத்தரங்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக கலந்துகொண்டு பேசினார்.
இக்கருத்தரங்கில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
ஊராட்சி முன்னேற்றக் குறியீடு குறித்த மாநில அளவிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப்சிங்பேடி அவர்களே, ஊரக வளர்ச்சி பயிற்சி ஆணையர் திரு.ஆனந்தகுமார் அவர்களே, ஊரக வளர்ச்சித்துறை உயர் அலுவலர்களே, 9 மாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்களே, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களே, ஒன்றியக்குழு தலைவர்களே, மாநில அளவில் 18 துறை சார்ந்த உயர் அலுவலர்களே அனைவருக்கும் வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கிராமங்கள்தான் நமதுநாட்டின் முன்னேற்றத்துக்கான முதுகெலும்பு. அத்தகைய முதுகெலும்பான கிராமங்களை வளர்க்க வேண்டும். வளம் பெறுவதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கி கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே அரசின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்வேகமிக்க தலைமையிலான இந்த அரசு மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் வழியைப் பின்பற்றி மகாத்மா காந்தி கண்ட கனவான தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
கிராம மேம்பாடு என்பது வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை சுகாதாரத்துறை, சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை போன்ற பலதுறைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளோடு பின்னிப்பிணைந்துள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகளை அடைய வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை செயல்படுத்தும் விதமாக, 9 கருப்பொருள்களின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சியும் ஒட்டுமொத்த மக்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு வளர்ச்சித் துறைகள் சார்ந்த காரணிகளை உள்ளடக்கி உள்ளூர் இலக்குகள் மற்றும் உள்ளூர் குறியீடுகளை அடையும் விதமாக, “ஊராட்சி முன்னேற்ற குறியீடு” (Panchayat AdvancementIndex) என்னும் கிராம வளர்ச்சி நிலையை அறிந்துகொள்ள ஏதுவான அளவுகோலாக மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் ஊராட்சி முன்னேற்ற குறியீடை அளவீடு செய்வதற்கான முதற்கட்ட கணக்கெடுப்பு (PAI 1.0) 2022-23 ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் அனைத்துத் துறைகளின் ஒத்துழைப்புடன் 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்டு அதற்கான அறிக்கை அண்மையில் மத்திய அரசால் இணையதளத்தில்(www.pai.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு வெற்றிகரமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற காரணமாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு வழங்கி தேவையான தகவல்களை சரியான நேரத்தில் வழங்கிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் தமிழக அரசின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கணக்கெடுப்பில் 18 துறைகள் சார்ந்த உள்ளூர் குறியீடுகளுக்கான தகவல்கள்,
1. வறுமை இல்லாத வாழ்வாதாரம் நிறைந்த ஊராட்சி
2. நல்வாழ்வு ஊராட்சி
3. குழந்தை நேய ஊராட்சி
4. நீரில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி
5. சுத்தமான பசுமை நிறைந்த ஊராட்சி
6. உட்கட்டமைப்பு வசதிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி
7. சமுக நீதி மற்றும் சமுக பாதுகாப்பு நிறைந்த ஊராட்சி
8. சிறப்பான நிர்வாகம் நடைபெறும் ஊராட்சி
9. பெண்கள் நேயஊராட்சி
ஆகிய 9 கருப்பொருள்களின் கீழ் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரநிலைப்படுத்தப்பட்டுள்ளது. (Grading). இதில் கிராம ஊராட்சிகள் அடையும் இலக்குகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு தரநிலைப்படுத்தப்படுகிறது.
தற்போது முதற்கட்ட கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான கிராம ஊராட்சிகள் சிறந்த தரநிலையைப் பெற்றுள்ளன. முதற்கட்ட கணக்கெடுப்பு என்பது ஒரு தொடக்க நிலையாகும். எனினும் இது நமது கிராமங்களின் நாளைய வளச்சிக்கான இலக்குகளை நிர்ணயம் செய்திடவும், எந்தெந்த துறைகளின் கீழ், இனங்களின் கீழ் முன்னேற்றம் தேவை, அதற்கான செயல்திட்டம் என்னென்ன தேவை என்பதை துல்லியமாக அறிந்து கொண்டு செயல்பட ஏதுவாகும்.
நாம் விரைவில் ஊராட்சி முன்னேற்ற கிராம குறியீடுக்கான அடுத்த கணக்கெடுப்பை(PAI 2.0) துவக்கிட உள்ளோம். இக்கணக்கெடுப்பில் நாம் முந்தைய கணக்கெடுப்பின்போது இருந்த பல சிரமங்கள் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இதற்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மேலும், முதற்கட்ட கணக்கெடுப்பின் விவரங்களை மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் அனைத்து துறைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தும் விதமாக கருத்தரங்குகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்துத் துறைகளும் தவறாமல் இதில் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த தகவல்கள் முறையாகவும், சரியாகவும் வழங்கப்பட்டுள்ளதா, உயரிய வளர்ச்சி நிலை எவ்வாறு உள்ளது, வளர்ச்சி அடைய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அரசு நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திடவும் தக்க நடவைக்கை எடுத்திடவும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், முதற்கட்ட கணக்கெடுப்பில் ஏற்பட்ட தவறுகளையும், குறைகளையும் நீக்கி தரவுகளை தரமானதாக பெற்று உள்ளீடு செய்திட, அதை சரிபார்த்து ஒப்புதல் வழங்கும் மேற்பார்வை அலுவலர்கள் தங்களது பணியை செவ்வனே செய்தால் மட்டுமே கிராம ஊராட்சிகளின் உண்மையான வளர்ச்சி நிலை புலப்படும். அதன் அடிப்படையில் நாம் நமது கிராமங்ளை மேலும் வளர்ச்சிப்பாதையில் முன்னேற்றம் கண்டிட உரிய நடவடிக்கைகளை எடுக்க இயலும். எனவே, இரண்டாம் கட்ட கணக்கெடுப்பை சரியான முறையில் மேற்கொள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் அனைத்து நிலைகளிலும் நாட்டிலேயே சிறப்பாக செயல்படும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கிட நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், என பேசினார்.
இக்கருத்தரங்கில், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, 9 மாவட்டத்தின் மாவட்டஊராட்சித் தலைவர்கள், 9 மாவட்டத்தின் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 9 மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள், 18 துறை பொறுப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.