Close

The World Environment Day

Publish Date : 09/06/2025
.

செ.வெ.எண்:-15/2025

நாள்:-05.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் உற்பத்திக்கான விதை நடவுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களால் உருவாக்கப்பட்ட காளை வடிவ சிற்பத்தை திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் உற்பத்திக்கான விதை நடவுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(05.06.2025) தொடங்கி வைத்து, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களால் உருவாக்கப்பட்ட காளை வடிவ சிற்பத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

தொடர்ந்து, திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘உலக சுற்றுச்சூழல் தின விழா’ மற்றும் ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, மரக்கன்று நடவு செய்தார். பள்ளியில் மாவட்ட அளவில் 28 பள்ளிகளைச் சார்ந்த 170 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, ஓவியம் வரைதல், ரங்கோலி மற்றும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்ற தலைப்பில் கண்காட்சி அமைத்திருந்தனர். விழாவில் பங்கேற்ற அனைவரும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக சுமார் 300 மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் வனப்பகுதியை 33 சதவீதம் அளவிற்கு அதிகரிக்க உத்தரவிட்டு, வனப்பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

காடுகள் மற்றும் இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள காலியிடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து, தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உலக சுற்றுச்சூழல் தினமான இன்று உறுதி ஏற்போம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலகங்களையும் துாய்மைப்படுத்தும் வகையில் கழிவுகளை சேகரித்தல், பிரித்தல், மொத்த விற்பனையாளர்களிடம் விற்பனை செய்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆ.ஹரிஹரசுதன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி கோ.இராஜராஜேஸ்வரி உதவி பொறியாளர்கள் திருமதி அனிதா, திருமதி தாரணி மற்றும் உதவி மேலாளர் திருமதி ஜான்சி ராணி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் திரு.தங்கராஜ், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரு.முகமது தஸ்நீம், திரு.பாபு மற்றும் திரு.ஜமால்முகமது, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர்(கல்வி) திரு.அ.சரவணக்குமார், முதலமைச்சரின் பசுமை நிர்வாகி திருமதி கார்த்திகா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.