The World Environment Day -Kannivadi

செ.வெ.எண்:-18/2025
நாள்:-06.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நபார்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் விதமாக, கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நபார்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் விதமாக, கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில், நபார்டு வங்கி நிதி உதவியுடன் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு, பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தில் மண் வரப்புகள் அமைத்தல், பண்ணை குட்டைகள், பழமரக்கன்றுகள், மரக்கன்றுகள், நீர் உறிஞ்சும் குழிகள், சங்கன்குட்டைகள், கம்பி வலை தடுப்பணைகள், சொட்டுநீர் பாசனம், தானியங்கி சொட்டு நீர் பாசன கருவிகள், ஓடைகள் ஆழப்படுத்துதல், குளங்கள் ஆழப்படுத்துதல், மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள், மண்புழு உரங்கள் பயன்படுத்துதல், பூச்சி ஒட்டு அட்டைகள், ஆடு வளர்த்தல், கோழி வளர்த்தல், வீட்டு தோட்டங்கள், சூரிய ஒளி உலர் கூடங்கள், கால்நடைகளுக்கு காப்பீடு, கிராம அறிவு வளமையம், மியாவாக்கி குறுங்காடுகள், பசுந்தீவன வளர்ப்பு போன்ற திட்டப் பணிகள் ரூ.1.15 கோடி நிதியுடன் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.
நபார்டு நீர்வடிப்பகுதி திட்டப் பணிகளால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட முன்னேற்றங்கள், விவசாயத்தில் ஏற்பட்ட ஆரோக்கியமான சூழல், விவசாயிகளிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை விவசாய முறைகள் மற்றும் நவீன விவசாய உபகரணங்களை பயன்படுத்தும் விதங்கள், செலவில்லாத விவசாயம் செய்யும் அணுகுமுறைகள், இரசாயன பயன்பாடு குறைப்பு, இயற்கை விவசாயத்தின் வாயிலாக இரட்டிப்பு வருமானம் அடைதல், நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்த்துதல் போன்ற மாற்றம் கண்ட விவசாயிகளின் தோட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து, கலந்துரையாடினார்.
விவசாயிகளுக்கு நீண்ட காலம் பயன் தரக்கூடிய மரப்பயிர்கள் நடவு செய்து இன்று நல்ல பலன் தரக்கூடிய நிலையில் இருக்கும் தோட்டங்களை பார்த்து விவசாயத்தில் தென்னை மரத்திற்கு இணையான அல்லது அதற்கு மேலாக வருமானம் தரக்கூடிய மரப்பயிர்கள் நடவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை மேற்கொள்ளுமாறு திட்டப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், விவசாயிகளின் வீட்டு அருகே அமைக்கப்பட்டிற்கும் காய்கறி தோட்டத்தில் மூலிகை பயிர்களையும் சேர்த்து சாகுபடி செய்து இயற்கை முறையில் மருத்துவம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் இயற்கை வழி ஒருங்கிணைந்த பண்ணையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். திட்டத்தின் ஒரு பகுதியாக நிலமற்ற ஏழைப் பெண் பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.
நான்காண்டு கால திட்ட பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வறண்டுபோன கிணறுகளில் நீர் மேம்பாடு அடைந்ததை அடுத்து விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து பேசினார்.
சிரங்காடு கிராமத்தில் விவசாயி திரு.ஆறுமுகம் என்பவர் தோட்டத்தில் வளர்க்கப்பட்டிருந்த மகாகனி மற்றும் குமிழ் மரங்கள், விவசாயி திருமதி பவுனம்மாள் தோட்டத்தில் வளக்கப்பட்டிருந்த தேக்கு மரங்கள், கசவனம்பட்டியில் விவசாயி திரு.தர்மலிங்கம் தோட்டத்தில் மூன்றரையாண்டு கால அளவில் உயர்ந்து செழித்து ஓங்கி வளர்ந்திருந்த மலைவேம்பு மரங்கள், போத்தி நாயக்கன்பட்டியில் விவசாயி திரு.ராஜாராம் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை வழி விவசாயம், இயற்கை இடுபொருட்கள், ஒருங்கிணைந்த பண்ணையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக கன்னிவாடி மலையடிவாரத்தில் பாண்டியராஜன் காட்டில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
நபார்டு வங்கியின் சார்பாக கன்னிவாடி நீர்வடிப் பகுதியை சேர்ந்த 30 விவசாயிகளுக்கு ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் நர்சரி மேனேஜ்மென்ட் மற்றும் காய்கறி சாகுபடியில் திறன் கூட்டல் பயிற்சி 15 நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சியின் நிறைவு நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பயிற்சியில் கலந்து கொண்ட நபர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும், பயிற்சியில் கலந்து கொண்ட 15 விவசாயிகளுக்கு கூட்டு பொறுப்புக்குழு கடன் அனுமதி கடிதத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், நபார்டு வங்கி உதவி துணைப் பொதுமேலாளர் திரு.ஹரிஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திருமதி சுபாஷினி, ஸ்பேஸ் நிறுவன இயக்குனர் ரமேஷ், கன்னிவாடி நீர்வடிப் பகுதி கமிட்டித் தலைவர் திரு.ரிச்சர்ட் ராவணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.