The World Environment Day

செ.வெ.எண்:-05/2025
நாள்:-03.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
உலக சுற்றுச்சூழல் தினம்-2025-ஐ முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்-2025-ஐ முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நெகிழி மாசு கட்டுப்படுத்துவதற்கான மாபெரும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று(03.06.2025) கொடியசைத்து தொடங்கி வைத்து, மஞ்சள் பைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் வனப்பகுதியை 33 சதவீதம் அளவிற்கு அதிகரிக்க உத்தரவிட்டு, வனப்பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள காலியிடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து, தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.இரா.குணசேகரன், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.