TN Assembly Public Accounts Committee -Meeting

செ.வெ.எண்:-20/2025
நாள்: 06.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர்(2024-2025), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் இன்று(06.03.2025) அனைத்துத்துறை சார்ந்த மாவட்ட உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் போளுர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கடலுார் சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.ஐயப்பன், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.பெ.செந்தில்குமார், பரமத்திவேலுார் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சேகர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்புச் செயலாளர் திரு.ஜெ.பாலசீனிவாசன் மற்றும் தலைமைச் செயலக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக 1921-ஆம் ஆண்டு பொதுக் கணக்குக்குழு தொடங்கப்பட்டது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நடக்கின்ற வரவு-செலவு கணக்குகள் மற்றும் நிதிநிலை அறிக்கையை பொதுக் கணக்குக்குழு கண்காணிக்கும். ஒரு பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும், இன்னொரு பகுதியில் ஆய்வு செய்து கொடுத்த கோப்புகளை விசாரணை செய்யும்.
ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்பதற்கு பொது கணக்குக்குழு செய்கின்ற பணிகள் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தால், அதை கண்காணித்தல், கோப்புகள் தயாரித்தல், கணக்காயர்கள் ஆய்வு செய்து சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பித்தல் பணிகளை பொதுக்கணக்குக்குழு மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் ஒன்றிய கணக்காயர்கள், மாநில கணக்காயர்கள் கொடுக்கின்ற அறிக்கையை வைத்து, இப்போது மாவட்ட வாரியாக, மாதத்திற்கு ஒரு முறை சென்னையில் துறை ரீதியான செயலாளர்களை அழைத்து அவர்களிடம் கேட்டு, தெரிந்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பொதுக் கணக்குக்குழு 100 ஆண்டுகளை கடந்து ஐனநாயகத்தை மலரச் செய்து கொண்டியிருக்கிறது.
நாடாளுமன்ற குழுக்கள், சட்டமன்றக் குழுக்கள் என பல்வேறு குழுக்கள் இருக்கின்றன. அனைத்துக் குழுக்களுக்கும் ஆய்வுக் குழு, பொதுக்கணக்குக்குழு, நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு மற்றும் சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு இல்லாமல் ஐனநாயகம் முழுமை அடையாது.
மக்களின் சார்பில் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை பொதுக்கணக்குக்குழு பராமரித்து உண்மையான வெளிப்படை தன்மையை வெளிபடுத்துகிறது. நிதியை செலவழிக்க நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும், அனுமதி அளிக்கும் வகையில், இந்த நிதியை எவ்வாறு செலவு செய்வது என்பதை ஆய்வு செய்யும் வகையில் பொதுக் கணக்குக்குழு ஈடுபட்டு வருகிறது. தூய்மையான பொது வாழ்க்கையில் கணக்கு வழக்குகளை சிறப்பாக கையாளுவது அவசியம் என்பதை மகாத்மா காந்தியடிகள் அவர்கள் பலமுறை நாட்டு மக்களுக்கு அறிவிப்பாக கூறியிருக்கிறார். குறிப்பாக நமது நாடாளுமன்றத்தில் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி அவர்கள் 1984-ல் உரையாற்றும்போது ஒரு ரூபாய் நிதியை ஒதுக்கினால் அதில் 16 பைசாதான் மக்களை சென்றடைகிறது. மக்களுடைய வரிப்பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி குறிப்பிட்டார்.
ஒரு ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றால் 16 பைசாதான் மக்களுக்கு சென்றடைகிறது. 84 பைசா விரையமாகிறது. அது விரையமாகாமல் மக்களுடைய வரிப்பணம் ஒரு ரூபாய் ஒதுக்கினால் மக்களவை நிதிநிலை, சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதி நேரடியாக மக்களுக்கு சென்றைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதுதான் பொதுக்கணக்குக்குழுவின் பணி. அதன் அடிபடையில்தான் பொதுக்கணக்குக் குழு தங்களுடைய ஆய்வில் மாதந்தோறும் 2 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் காலையிலிருந்து கள ஆய்வு மேற்கொண்டு, ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எந்த துறையாக இருந்தாலும் சிறப்பாக பணியாற்றக்கூடியவர். அவர் சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் பொழுது அண்ணல் அம்பேத்கார் திட்டத்தில், யார் யாரெல்லாம் விச வாயு தாக்கி இறந்து போகிறார்களோ, அவர்களின் குடும்பத்தினரை தொழில் முனைவர்களாக உருவாக்கினார். அவர் சிறப்பாக பணியாற்றக்கூடியவர் என்று எல்லோருடமும் பெயர் பெற்றவர். இந்த மாவட்டம் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும். எல்லோரும் சேர்ந்து இன்னும் முன்னுக்கு கொண்டு வர வேண்டும்.
இன்னும் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை சட்டப்பேவை பொதுக்குழு செய்ய இருகிறது. 31 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை புதியதாக கட்ட சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு பரிந்துரை செய்கிறது.
கொடைக்கானல் நகரின் மேம்பாட்டிற்காக மாஸ்டர் பிளான் உருவாக்கவும், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும், கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்கவும் அவசியம் கருதி இந்தக்குழு பரிந்துரை செய்கிறது. கொடைக்கானல் நகர்ப்புற பகுதியில் கட்டப்பட்ட கட்டடங்களில் விதிமீறல் குறித்து தீர்வு காண வேண்டும்.
வேளாண் தொழிலை மேம்படுத்தவும், விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் பச்சையாறு அணை திட்டம் அவசியம். வேளாண்மை குடிமக்களின் ஜீவாதாரத்தை பாதுகாக்க இத்திட்டம் அவசியம் என இக்குழு பரிந்துரை செய்கிறது.
கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பான திட்டம் தயாரிப்பது குறித்து அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். கொடைக்கானலில் வாகனங்களை நிறுத்துவதற்கு மல்டிலெவல் கார்பார்க்கிங் அவசியம். இதுகுறித்தும் இக்குழு பரிந்துரை செய்கிறது.
வருவாய்த்துறை, வீட்டு வசதி வாரியம், நெடுஞ்சாலைத்துறை செயலர்களுடன் திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பழனி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.
வரும் 14-ஆம் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்குகிறது. அந்த நாட்களில் ஒரு நாள் துறை செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து இதற்கு தீர்வு காண சட்டமன்ற பொதுக்கணக்குக் குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், என மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர், 16 பயனாளிகளுக்கு ரூ.3.87 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வன அலுவலர்கள் திரு.ராஜ்குமார், இ.வ.ப., திரு.யோகேஸ்குமார் மீனா, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் திரு.ச.ராஜப்பா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.