Close

TN Legislative Assembly – Public Undertaking Committee Inspection – Dindigul

Publish Date : 24/06/2022
.

செ.வெ.எண்:-22/2022

நாள்:22.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.இராஜா அவர்கள் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2021-2023), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.இராஜா அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், 21.06.2022 அன்று வருகை தந்து கொடைக்கானல் பகுதியில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து இன்று(22.06.2022) திண்டுக்கல் மேற்கு வட்டம், பள்ளபட்டி கிராமத்தில் தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவது குறித்தும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கொண்டு மரங்கள் வளர்த்து வருவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.இராஜா அவர்கள் தலைமையில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.அரவிந்த் ரமேஷ்(திமுக), பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கிருஷ்ணசாமி(திமுக), மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி(திமுக), கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.நாகைமாலி(இ.கம்யூ.மா), மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்;, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், மாண்புமிகு திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மு.பாஸ்கரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு சிறப்பு பணி அலுவலர் திரு.எம்.எல்.கே.ராஜா, துணைச் செயலாளர் திரு.மு.கருணாகரன், குழு அலுவலர் திரு.பா.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர். இராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2021-2023) திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நேற்று முதல் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பழங்குடியினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தினமும் 350 நபர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு சிடி ஸ்கேன் வசதி மற்றும் இங்குள்ள பல் மருத்துவப் பிரிவிற்கு புதிய நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என பழனி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். இக்குழு மருத்துவமனையில் நவீன உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்கிறது. அதுபோல அங்குள்ள ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியை ஆய்வு செய்து அங்குள்ள குறைபாடுகளை பார்வையிட்டோம். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அந்த விடுதி ரூ.40 லட்சம் மதிப்பில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது, அப்பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்கள்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள ஏரியில் 8 மாதங்களுக்கு தண்ணீர் ஓட்டம் உள்ளது. அதன்பின்னர் 4 மாதங்களுக்குத்தான் தண்ணீர் தேக்கம் அடைகிறது. சுற்றுப்புறச் சூழல் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில் மாசு பாதிப்பு ஏதும் இல்லாமல் உள்ளது. அதேபோல இன்று திண்டுக்கல் பகுதியில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது மன நிறைவாக இருந்தது. இம்மாவட்டத்தில் மூத்த அமைச்சர்களான கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களும், உணவுத்துறை அமைச்சர் அவர்களும் இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட இப்பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கடனுதவி வழங்குவதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கொடைக்கானலில் உள்ள இந்துஸ்தான் யுனி லீவர் பன்னாட்டு நிறுவனம் 20 ஆண்டு காலமாக மாசுக்கட்டுப்பாடு பிரச்சனையில் உள்ளது. இந்நிறுவனத்தின் இடத்தினை அரசு கையகப்படுத்தி, மக்களுக்கு அச்சமில்லாத வகையில் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்கிறது. இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தின், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.எஸ்.ராஜப்பா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலைய இயக்குநர் திரு.ராஜசேகரன், பொருளாளர் திரு.கண்ணன், பொது மேலாளர் திரு.ஜாகீர்உசேன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.மணிமாறன், உதவிப்பொறியாளர் திருமதி உதயா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.