TNLA-Public Undertaking Committee Inspection- Kodaikanal

செ.வெ.எண்:-41/2025
நாள்:-13.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையிலான குழுவினர் கொடைக்கானல் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2024-2026), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று(13.06.2025) ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நேற்று(12.06.2025) வருகை தந்தனர். திண்டுக்கல், பழனி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரு.உடுமலை கே.இராதாகிருஷ்ணன், திரு.கடம்பூர் ராஜூ, திரு.ஆ.கோவிந்தசாமி, திரு.வி.பி.நாகைமாலி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், திரு.த.வேலு ஆகியோர் இன்று(13.06.2025) கொடைக்கானல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து, கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர், கொடைக்கானல் நகராட்சி மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்வையிட்டனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு, விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கொடைக்கானலில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை உண்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கொடைக்கானல் சுற்றுலாப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டது. திண்டுக்கல், பழனி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, கொடைக்கானலில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகள், மருந்துகள் வழங்கும் பணிகள், அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகளுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாமல் இருந்தது, இதுகுறித்து அறிவுறுத்தியதன்பேரில் உடனடியாக இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும்போது, கவரில் வைத்து காலை, மாலை, இரவு என்பதை குறிப்பிட்டு வழங்கி வருகின்றனர். தொடர்ந்து இதுபோல் மருந்துகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக நெகிழி மாசுவை கட்டுப்படுத்திட மீண்டும் மஞ்சள் பை என்ற திட்டத்தை கொண்டுவந்தார்கள். கொடைக்கானல் நகராட்சி மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு, விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது. கொடைக்கானலில் லேக், பேருந்து நிலையம் உட்பட பல்வேறு சுற்றுலாப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, இங்கு இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளன என்பது குறித்து, இந்தக்குழு பரிந்துரை செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும், என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், இணைச் செயலாளர் திருமதி பி.தேன்மொழி, குழு அலுவலர் திரு.ம.செந்தில்குமார், சார்புச் செயலாளர் திருமதி த.இந்திராகாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி உட்பட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.