TNSRLM – Self Help Group – Notification
செ.வெ.எண்:-33/2023
நாள்:-13.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் 2021-22 முதல் 31.10.2023 வரை மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார்.
பிரதிபலன் எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாகவும், வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.15,000, சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.1.50 இலட்சம், மகளிருக்கான சமுதாயத்திறன் பள்ளி சார்பில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு சுயதொழில் தொடங்குவதற்காக, அவர்களின் கிராமத்திற்கு அருகில் தகுதிவாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளித்து தொழில் தொடங்கிட ரூ.1.00 இலட்சம், உணவு பதப்படுத்தும் தொழிலை விரிவுபடுத்த ஆதார நிதியாக தனிநபர் கடன் ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது, சந்தைப்படுத்தல் தொடர்பான முயற்சிகளில் 100 கல்லுாரி சந்தைகள் மற்றும் தமிழ்நாட்டில் 100 சுற்றுலாத்தலங்களில் மதி அங்காடி உருவாக்குதல், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் 100 நாட்கள் சிறப்பு கண்காட்சிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கான நுண் கடன் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்கு உறுப்பினர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ சிறுதொழில், வணிகம் செய்வதற்கு நபருக்கு ரூ.1.00 இலட்சமும், குழுவிற்கு ரூ.15.00 இலட்சமும் என ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் 4 ஆண்டு கால தவணையில் கடனுதவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் முன்னேற்றத்திற்காக தையல் பயிற்சி, மூங்கில் கூடை முடைதல், காகிதப்பை தயாரித்தல் போன்ற திறன் பயிற்சிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டத்தில் மானியக்கடனுதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கான கறவை மாடு வழங்கும் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கான ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் மகளிருக்காக செயல்படுத்தப்படுகின்றன.
மகளிர் திட்டமானது, மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தரத்தை அக்குழுக்களுக்கு வழங்கப்படும் குழு ஊக்குநர், பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பயிற்சியின் மூலம் மகளிர் திட்டமானது உறுதி செய்கிறது. இந்த பயிற்சியானது மகளிருடைய வாழ்க்கையில் தரமான மாற்றத்தையும் நல்ல முறையில் குழுக்களை நடத்துவதற்கு உறுதி செய்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 1095 குழுக்களில் 11,446 உறுப்பினர்களும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 647 குழுக்களில் 6303 உறுப்பினர்களும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 813 குழுக்களில் 8228 உறுப்பினர்களும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 499 குழுக்களில் 5440 உறுப்பினர்களும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 484 குழுக்களில் 4996 உறுப்பினர்களும், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 1091 குழுக்களில் 11,051 உறுப்பினர்களும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 623 குழுக்களில் 6217 உறுப்பினர்களும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 900 குழுக்களில் 9099 உறுப்பினர்களும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 584 குழுக்களில் 6120 உறுப்பினர்களும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 562 குழுக்களில் 5692 உறுப்பினர்களும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 561 குழுக்களில் 5595 உறுப்பினர்களும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 572 குழுக்களில் 6100 உறுப்பினர்களும், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 466 குழுக்களில் 4830 உறுப்பினர்களும், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 661 குழுக்களில் 7085 உறுப்பினர்களும் என ஊரகப் பகுதிகளில் மொத்தம் 9558 குழுக்களில் 98,202 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,482 குழுக்களில் 41,283 உறுப்பினர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆக மொத்தம் 13,040 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன, அதில் 1,39,485 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 236 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.35.00 இலட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 465 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.69.00 இலட்சம், 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 188 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.28.00 இலட்சம் என மொத்தம் ரூ.1.32 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 1,538 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.9.91 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 1,315 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.19.72 கோடி, 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 389 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.01 கோடி என மொத்தம் ரூ.34.64 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 18,548 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.976.94 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 11,631 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.621.16 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 5,474 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.388.87 கோடி என மொத்தம் ரூ.1,986.97 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் நகர்ப்புற பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 633 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.63.00 இலட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 652 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.65.00 இலட்சம் என மொத்தம் ரூ.1.29 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 328 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.15.28 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 3,148 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.207.40 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 3,911 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.194.08 கோடி என மொத்தம் ரூ.416.77 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-22 முதல் 31.10.2023 வரை ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.