Close

Tour-Horticulture Schemes – Reddiyarchatram

Publish Date : 06/01/2022
.

செ.வெ.எண்:-13/2022

நாள்:-06.01.2022

மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், மாடித்தோட்ட தளைகள், காய்கறி விதை தளைகள், ஊட்டச்சத்து தளைகள் மானிய விலையில் பெற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் செல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

ரெட்டியார்சத்திரம் வட்டாரம் செம்மடைப்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 35 சதவீதம் மானியத்தில் அம்மன் குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. 3,750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கானது ரூ.8.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்ககத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கிற்கு அரசு மானியமாக ரூ.1.312 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இக்குளிர்பதன சேமிப்பு கிடங்கில் புளி, மோர் மிளகாய் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களும் சேமிக்கப்பட்டு வருகிறது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் இந்தியா-இஸ்ரேல் கூட்டு தொழில்நுட்பத்தில் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் காய்கறி மகத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்தர தொழில்நுட்ப நாற்றாங்கால் பண்ணையில் தக்காளி 67 இலட்சம், மிளகாய் போன்ற காய்கறி குழித்தட்டு நாற்றுகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளரி மற்றும் காளிபிளவர் பயிர்கள் பசுமை குடிலில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் துல்லியப் பண்ணை முறையில் கத்திரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ரெட்டியார்சத்திரம் வட்டாரம், கொத்தப்புளி கிராமத்தில் புதிதாக அமைந்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து கன்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெட்டியார்சத்திர வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ், கிராம மகத்துவ திட்டத்தின்கீழ், பலக்கனூத்து, குருநாதநாயக்கனூர், கே.புதுக்கோட்டை, சுள்ளெரும்பு மற்றும் கசவனம்பட்டி கிராமங்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் வீரிய ஒட்டு ரக காய்கறி நாற்றுகள், பண்ணைக் குட்டைகள், மண்புழு உரக்கூடாரம் அமைத்தல், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், பசுமைக்குடில், நிழல்வலைக் கூடாரம், நிலப்போர்வை, தேனீ வளர்ப்பு மற்றும் இயற்கை முறை சாகுபடி உள்ளிட்ட இனங்களில் அரசு மானியம் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இக்கிராம மகத்துவ திட்டத்திற்கு ரூ.5 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இத்திட்டங்களை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடிப்பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தின்படி, நகரப் பகுதிகளில் 6 வகையான காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள்-6, இரண்டு கிலோ அளவிலான தென்னை நார் கட்டிகள்-6, 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், 100 மி.லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட தளைகள் மானிய விலையில் ரூ.225-க்கு வழங்கப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு மாடித் தோட்டத்தளைகள் வரை வழங்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக, கத்தரி, மிளகாய், வெண்டை, முருங்கை, சாம்பல், பூசணி மற்றும் கீரைகள் போன்ற 12 வகையான காய்கறி விதை தளைகள் ரூ.15-க்கு வழங்கப்படுகிறது. இக்காய்கறி விதைத்தளையினை ஒருவர், இரண்டு தொகுப்புகள் வரை பெற்றுக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின்படி, மூலிகை செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து பயன்பெற, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா மற்றும் சோற்று கற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகள் ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாடி தோட்டம் 2,000 தளைகள், மூலிகை தளைகள் 7,000, காய்கறி விதை பொட்டலங்கள் 6,700 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாடித்தோட்ட தளைகள் ரூ.225க்கும், 8 செடிகள் கொண்ட ஊட்டச்சத்து தளைகள் ரூ.25-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், அடியனூத்து பகுதியில் தேசிய தோட்;டக்கலை இயக்க திட்டத்தின்கீழ், அரசு மானியத்துடன் பசுமைக்குடிலில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளரி சாகுபடி, மழை நீர் சேகரிப்பு பண்ணைக்குட்டை அமைத்தல் பணி, பசுமை குடிலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ரோஜா மற்றும் குடை மிளகாய் பயிர்கள், பண்ணைக்குட்டை மற்றும் சிப்பம் கட்டும் அறை ஆகியவற்றை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விவசாயிகளிடம் சாகுபடி குறித்த விபரங்களை கேட்டறிந்தார்கள்.

ஆய்வின்போது, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஜோ.பெருமாள்சாமி, ரெட்டியார்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.பா.செல்வக்குமார், வட்டார தோட்டக்கலை அலுவலர் அ.பவானி, திட்ட பயனாளிகள் உட்பட பலர் உடன் இருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.