Close

Traditional Food Festival

Publish Date : 23/11/2021
.

.

செ.வெ.எண்:-61/2021

நாள்:23.11.2021

சிறு தானியங்களும், கீரைகள், பயறு வகைகள் நிறைந்த நம் முன்னோர்களின் உணவு முறைகளே, இக்காலக்கட்டத்திற்கு ஏற்றது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா-2021 திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று(23.11.2021) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பாரம்பரிய உணவு திருவிழாவை துவக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்து பாரம்பரிய உணவு கண்காட்சியினை பார்வையிட்டு தெரிவித்ததாவது:-

தமிழக அரசு, மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு குழந்தைகள், பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு நிகழ்வாக, நமது பாரம்பரிய உணவுகளை மக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் பாரம்பரிய உணவு திருவிழா வருடந்தோறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் துறையின் சார்பாக நடைபெற்று வருகிறது.

நமது முன்னோர்கள், ஆரோக்கியமான உணவுகளை உண்டு வாழ்ந்தனர். தற்போது செயற்கையான வேதிபொருட்கள் நிறைந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமே இல்லாமல் வாழ்கிறோம். இவற்றையெல்லாம் உணர்த்தவே, இந்த உணவு திருவிழா நடத்தப்படுகிறது. இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கமே உணவின் பன்முகத்தன்மையை அறிந்து கொண்டு அவற்றை கடைபிடித்தல், செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்துதல், உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் முதலிய உணவு பொருட்களிலிருந்து அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெறுதல் ஆகியவையாகும். இந்நிகழ்ச்சியின் மூலம் ஏற்படுத்தும் விழிப்புணர்வால் தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைத்தல், அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்துதல் ஆகும்.

நம் முன்னோர்கள் வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு முதலிய சிறு தானியங்களை உண்டு நலமாக வாழ்ந்தனர். அக்காலத்தில், மண்பானை, இரும்புப் பாத்திரங்கள், இரும்பு வாணலி பயன்படுத்தி உணவு சமைத்தனர். அதனால் அவர்களுக்கு தேவையான இரும்புசத்து, பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்டவை அந்த சமையல் பாத்திரங்களில் இருந்தே கிடைத்தன. ஆனால் தற்போது உடலுக்கு ஒவ்வாத உணவு பொருட்களை உண்டு வாழ்கிறோம்.

சிறு தானியங்கள் என்று சொன்ன காலம்போய் இன்று ஊட்டச்சத்து தானியங்கள் என்று உணவியல் வல்லுனர்கள் சொல்லும் அளவுக்கு அதன் மதிப்பு உயர்ந்து உள்ளது. நெல்லரிசி, கோதுமையை விட சிறு தானிய உணவுகளில் புரதங்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து என ஏனைய பல சத்துகளும் அதிகமாக உள்ளன.

நாம் தான் காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் உடம்புக்கு ஒவ்வாத துரித உணவுகளின் பக்கம் சாய ஆரம்பித்து அவற்றிற்;கு அடிமையாகி கொண்டு இருக்கிறோம். அதன் பலனையும் இன்று அறுவடை செய்ய தொடங்கிவிட்டோம். இளம் வயதிலேயே உடல் பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய், புற்று நோய் என நோய்களை பெற தொடங்கிவிட்டோம்.

முன்னோர்களின் உணவே மருந்தாக இருந்தது. மூன்று வேளை உணவுகளிலும் சிறு தானியங்களும், கீரைகளும், காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என்று அதிக சத்துள்ள உணவுகளாக இருந்தன. அதனால் உடல் நலத்துடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தனர். அவர்களின் இடைவேளை சிற்றுண்டிகள் கூட பயறு, சிறு தானிய இனிப்பு உருண்டைகள் இப்படியாக இருந்தன. ஆனால் இன்று மூன்று வேளை உணவும் பெரும்பாலானவர்களுக்கு மருந்து, மாத்திரைகளாகிப்போனது. இதெல்லாம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை கைவிட்டதன் விளைவுதான்.

சிறு தானியங்களும், கீரைகள், பயறு வகைகள் நிறைந்த நம் முன்னோர்களின் உணவு முறைகளே, இக்காலக்கட்டத்திற்கு ஏற்றது. பாரம்பரிய உணவின் மகத்துவத்தை உணர்ந்;து, உடல் ஆரோக்கியத்தை நோக்கி முழுமையாக பாரம்பரிய உணவிற்கு மாறுவோம். உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி சி.பூங்கொடி, எம்.வி.எம். அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் தே.இலட்சுமி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சிவராமபாண்டியன், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.பி.ஆர். சிவக்குமார், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் ஏ.ஜே.கல்யாணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் சே.அலெக்ஸ் ஐசக், உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.