TRB Examination Meeting

செ.வெ.எண்:-09/2025
நாள்: 04.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வு தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வு தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(04.03.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வு(TNSET-Tamilnadu State Eligibility Test) 06.03.2025-ஆம் தேதி முதல் 09.03.2025-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் ஜிடிஎன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 06.03.2025-ஆம் தேதி முதல் 09.03.2025-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேர்வுகளை 720 தேர்வர்களும், திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 09.03.2025 அன்று நடைபெறும் தேர்வில் 112 தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான அளவு ஆண் மற்றும் பெண் காவலர்கள் நியமித்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். உரிய தீத்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்வு நாளன்று அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வு நேரத்தில் தடையின்றி மின் விநியோகம் இருப்பதையும், அனைத்து கணினி சாதனங்களும் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான குடிநீர் வசதி. கழிப்பறைத் தூய்மை, தேர்வு மையப்பள்ளியின் சுற்றுப்புற தூய்மை போன்ற வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்திட வேண்டும். தேர்வு நடைபெறும் நாட்களில் அனைத்து தேர்வு மைய வழித்தடங்களிலும் தேர்வு நேரத்திற்கு உகந்தவாறு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் கட்டட உறுதித்தன்மை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதாக தேர்வறைக்கு சென்றுவர சாய்தள வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
தேர்வு நாட்களில் அனைத்து தேர்வு மையங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஏதேனும் திடீர் உடல் நலக் குறைவு ஏற்படின் தக்க முதல் உதவி மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், மருத்துவ வசதி ஏற்படுத்திட வேண்டும்.
தேர்வு சார்பான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அனைத்து தேர்வுகளும் முடியும் வரை தேர்வுப்பணிகளை கண்காணித்து தேர்வு நன்முறையில் நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி உஷா மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.