Tree Plantation- SIPCOT-Nilakottai
செ.வெ.எண்: 58/2024
நாள்: 20.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை சிப்காட் பூங்காவில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று(20.12.2024) நடைபெற்றது.
தொழில்துறையில் இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன், 1971-ஆம் ஆண்டிலேயே, அயராது உழைத்து, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொழிற்பூங்காவின் உருவாக்கத்திற்கு தொடக்கப்புள்ளி வைத்தவர் அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இன்று சிப்காட் நிறுவனம் 23 மாவட்டங்களில் 42,000 த்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், 7 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 42 தொழிற்பூங்காக்களை உருவாக்கி மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.
தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) அதன் தொழில் பூங்காக்களை மிகவும் நிலையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் மற்றும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்பாக செயல்படுவதின் வகையிலும் 2030-ஆம் ஆண்டிற்குள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெரும் இலக்கான ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது.
சிப்காட் வளர்ச்சியினை நிறுவனம் நீடித்து நிலைபெறத்தக்க ஊக்குவிப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்பூங்காக்கள் விளங்கிட, ஏற்கனவே 6.50 இலட்சம் மரக்கன்றுகள் வனத்துறையினர் மூலம் சிப்காட்டின் திறந்த வெளிப்பகுதிகள் மற்றும் சாலையோரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளும் நடைப்பெற்று வருகிறது. சிப்காட் நிறுவனம் எதிர் வரும் ஆண்டிற்குள் 10 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதை இலக்காக கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களிலும் ஒரே நாளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சிப்காட் பூங்காவில் 100 மரக்கன்றுகள் தமிழக வனத்துறை மூலம் பெற்று இன்று நடவு செய்யப்பட்டன. நிலக்கோட்டை, சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் 35.23 ஏக்கர் நிலப்பரப்பில் 16,618 மரக்கன்றுகள் ஏற்கனவே நடப்பட்டு பராமரிக்கபட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், வருவாய் வட்டாட்சியர் திருமதி த.விஜயலெட்சுமி, சிறுமலை வனசரக அலுவலர் திரு.அ.மதிவாணன், திட்ட அலுவலர் திரு.சீ.கண்ணன், சிப்காட் வளாகத்தில் உள்ள ஆம்வே இந்தியா, ரிலையன்ஸ் ரீட்டெயில், ஜே.கே.பென்னர் இந்தியா லிமிடெட், ஜி.ஆர்.பி.டெய்ரி புட்ஸ் போன்ற பல்வேறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.