Close

Ungalai Thedi Ungal Uril – Collector Inspection(Dindigul west)

Publish Date : 05/02/2024
.

செ.வெ.எண்:-73/2024

நாள்:-31.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(31.01.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்தி முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டு அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்தியாவிலேயே, தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலைநிமிரச் செய்திருக்கிறார்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ என்ற புதிய திட்டத்தை மாண்புக்கு தமிழ்நாடு முதலைச்சர் அவர்கள் கடந்த 23.11.2023 அன்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக இத்திட்ட முகாம் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது இன்று(31.01.2024) திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், திண்டுக்கல் மேற்கு, பலக்கனூத்து, ரெட்டியார்சத்திரம் மற்றும் தருமத்துப்பட்டி ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

திண்டுக்கல்(மேற்கு) வட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, சுகாதார வசதி, படிப்பதற்கான சூழல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. திண்டுக்கல் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள் இருப்பு, சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் பொன்னிமாந்துறையில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் நிலை குறித்து கேட்டறியப்பட்டது.

கொத்தப்புள்ளி நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொத்தப்புள்ளி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ரெட்டியார்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், விவசாய மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் அனைத்தும் தகுதியான விவசாயிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்கள், பயனடைந்த விவசாயிகள் விபரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் வருகை, கற்றல் மேம்பாடு, கல்வி பயில்வதற்கான ஆரோக்கியமான சூழல், காற்றோட்ட வசதி, இடைநிற்றல் மாணவர்கள் உள்ளனரா என்பது குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு தரமான, ஆரோக்கியமான மதிய உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் மற்றுமொரு திட்டமாகும். இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் இத்திட்ட முகாம்களில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி முருகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் திருமதி பிரபாவதி உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.