Close

Ungalai Thedi Ungal Uril – Inspection(Thadikombu)

Publish Date : 05/02/2024
.

செ.வெ.எண்:-01/2024

நாள்:-01.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் தாடிக்கொம்பு பேரூாட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்திற்குட்பட்ட தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(01.02.2024) ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மேற்கு வட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் வீடுவீடாக சென்று குப்பை சேகரிக்கும் துாய்மை காவலர்களின் பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், உண்டார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ என்ற திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, நேற்று(31.01.2024) தொடங்கி இன்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் மற்றுமொரு திட்டமாகும். பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும். எனவே, இத்திட்டத்தினை செயல்படுத்த அனைத்துப் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி மனோரஞ்சிதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) திரு.சுரேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி சந்தானம்மாள் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.