Close

Ungalai Thedi Ungal Uril

Publish Date : 01/02/2024

செ.வெ.எண்:-71/2024

நாள்:-30.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 31.01.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்.

உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் மற்றுமொரு திட்டமாகும். இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், அப்பகுதியில் அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது 31.01.2024 அன்று திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 31.01.2024 அன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பொதுமக்களின் குறைகளை களைய மாவட்ட ஆட்சியர் அவர்களால் மனுக்கள் பெறப்படவுள்ளது. மேலும் திண்டுக்கல் மேற்கு வட்டத்திலுள்ள திண்டுக்கல் மேற்கு, பலக்கனூத்து, ரெட்டியார்சத்திரம் மற்றும் தருமத்துப்பட்டி ஆகிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்களால் திண்டுக்கல் மேற்கு வட்டத்திற்குட்பட்ட பொதுமக்களிடம் காலை 09.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை மனுக்கள் பெறப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் இத்திட்டத்தில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.