Close

UTV – Uzhavarai thedi

Publish Date : 30/05/2025
.

செ.வெ.எண்:-93/2025

நாள்:-30.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை“ திட்டத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ஆத்தூர் வட்டாரம், எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில் “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை“ திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை“ திட்டத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக 29.05.2025 அன்று தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாரம், எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில் “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை“ திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாயம் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மைத்துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 2025-26-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” எனும் திட்டத்தை சட்ட மன்றத்தில் அறிவித்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” எனும் திட்டத்தை காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்கள்.

இத்திட்டமானது, வேளாண்மை நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனைத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, மீன் வளத்துறை வட்டார அலுவலர்கள், சார்புத் துறைகளான கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குவதோடு வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும் சார்புத் துறை திட்டங்களை பற்றியும் எடுத்துக்கூறி பயன்படும் வகையில் உள்ளது.

.

.

அதன்படி, 2025-26-ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 361 கிராமங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் ஆக மொத்தம் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக் கிழமைகளில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு கிராமங்களில் 15 நாட்கள் இடைவெளியில் முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 கிராமங்களில் இன்று முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாமில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் செயல்விளக்கங்கள், உழவர் நலன் சார்ந்த இதர அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், குழு பயணம் செல்லும்போது உழவர்களின் தேவைகளை அறிந்து உடன் செயல்படுதல், உரம் வேளாண்மை சாகுபடி குறித்த வழிகாட்டுதல்கள், வேளாண்மைச் சான்று பெறுவதற்கான வழிமுறைகள், விவசாயிகள் விளை பொருட்களை மதிப்பு கூட்டுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தயாரிப்பு வழிமுறைகள், சந்தைப்படுத்துவதற்கான மற்றும் ஏற்றுமதிக்கான ஆலோசனைகள் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மாதம் இரு முறை நடத்தப்படும் உழவரைத் தேடி வேளாண்மை முகாமில் பங்கேற்று வேளாண்மைத் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பற்றி அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.பாண்டியன் மற்றும் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.