Close

World Breastfeeding week celebration

Publish Date : 04/08/2021
.

செ.வெ.எண்:-07/2021

நாள்:04.08.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உலக தாய்ப்பால் வாரவிழா இன்று (04.08.2021) நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் அமைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. குழந்தையின் சிறப்பான ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலத்திற்காக பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பின்னர் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதுகாப்பான கூடுதல் உணவு கொடுக்க வேண்டும். தாய்ப்பால் மற்றும் கூடுதல் உணவு முறையாக பெற்ற குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்வார்கள். குழந்தையின் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முதல் ஆயிரம் நாட்களில் வழங்கப்படும் ஊட்டச்சத்தே அடித்தளமாகும்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவசுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.