World Population Awareness Rally

Publish Date : 11/07/2019
2

3

செ.வெ.எண்:-34/2019 நாள்:- 11.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் கெடியசைத்து துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (11.07.2019) உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் கெடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

1987-ம் ஆண்டு, ஜுலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. பெருகி வரும் மக்கள் தொகை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் குடும்ப நலத்திட்டம் 1956-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல துறைகளின் கூட்டு முயற்சியால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சிக்கும், நமது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்கும் அடிப்படையாக அமையும் மக்கள் தொகை பெருக்கத்தினை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

முக்கியமாக களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களின் விபரங்களின் அடிப்படையில் அந்தப்பகுதிகளில் தீவிரமாக களப்பணி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அதிக குழந்தைகள் இருப்பதனால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பற்றி களப்பணியாளர்கள் விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.

குறிப்பாக பெண்கள் நலன் கருதி அவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு அறிவிக்கப்படும் திட்டங்கள் மூலம், பொதுமக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கும், தாங்களாகவே முன்வந்து சமூகத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இப்பேரணி அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கி, திண்டுக்கல் தலைமை தபால் நிலையம், காமராஜர் பேருந்து நிலையம், பெரியார் சிலை மற்றும் நகரின் முக்கிய வழியாக சென்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் நாம் இருவர் நமக்கு இருவர், சிறு குடும்பம் சீரான வாழ்வு, அளவோடு பெற்று வளமோடு வாழ்க என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாதைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். பின்னர் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.மாலாதிபிரகாஷ்,துணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம்) மரு.கோ.பூங்கோதை அரசு மருத்துவமனை பயிற்சி பள்ளி மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்