Close

World Population Day

Publish Date : 15/07/2021
.

செ.வெ.எண்:-18/2021

நாள்:-12.07.2021

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த மருத்துவ அலுவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள்தொகை தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(12.07.2021) நடைபெற்றது. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க மருத்துவ அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

“நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும் தாய்மார்களின் நல்வாழ்விற்கும் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகையினைக் கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.

சிறு குடும்ப நெறி திருமணத்திற்கேற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்பநல முறைகள், முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய்சேய் நலத்தை காதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக்கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பைத் தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற குடும்பநல செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.

குடும்பநலத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். என்னுடைய இந்த முயற்சிகள் வெள்ளியடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும்.

தன்னம்பிக்கையும் தற்சார்பும் கொண்ட நம்நாட்டு மக்களுக்கு நெருக்கடியான சூழலிலும் குடும்பநலத் திட்ட சேவைகள் வழங்குவதை உறுதி செய்வோம்” என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள், வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார்.

1987-ம் ஆண்டு, ஜுலை மாதம் 11-ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. பெருகி வரும் மக்கள் தொகை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் குடும்ப நலத்திட்டம் 1956-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல துறைகளின் கூட்டு முயற்சியால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சிக்கும், நமது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்கும் அடிப்படையாக அமையும் மக்கள் தொகை பெருக்கத்தினை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

முக்கியமாக களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களின் விபரங்களின் அடிப்படையில் அந்தப்பகுதிகளில் தீவிரமாக களப்பணி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அதிக குழந்தைகள் இருப்பதனால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பற்றி களப்பணியாளர்கள் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் நலன் கருதி அவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மூலம், பொதுமக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கும், தாங்களாகவே முன்வந்து சமூகத்தின் நலன் கருதி செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். அதன்காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது பெருமைகுரிய விசயம். கொரோனா பரவல் தடுப்பு காலத்தில் மருத்துவப் பணியாளர்களின் பணி சிறப்பு வாய்ந்தது என்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வைரஸ் தொற்று பரவலை முழுமையாக தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அலுவலகர்கள் தொடர்ந்து முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.இரா.சிவக்குமார், துணை இயக்குநர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) மரு.கோ.பூங்கோதை, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.தி.சுரேஷ் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்