Close

World Womens Day – collectorate

Publish Date : 11/03/2025
.

செ.வெ.எண்:-30/2025

நாள்:-08.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினவிழா இன்று(08.03.2025) நடைபெற்றது.

விழாவில், அரசு துறைகளில் பணிபுரியும் பெண் அலுவலர்களுக்கான கோலப்போட்டி, கயிறு இழுத்தல், அதிர்ஷ்ட கட்டம் விளையாட்டு, உரியடித்தல், அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் தனித்திறமைகள் வெளிப்படுத்துதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கான பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு திட்டமானாலும் பெண்களை முன்னிலைப்படுத்திதான் செயல்வடிவம் கொடுக்கப்படுகிறது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அரசு அலுவலகங்கள், தொழில்துறை என எந்த துறையாக இருந்தாலும் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. கடின உழைப்பால் உயர்ந்த பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று பணியில் சேருகின்றனர். ஒரு குடும்பத்தில் கூட பொருளாதார நிர்வாகம் என்பது பெண்களை முன்னிலைப்படுத்திதான் இருக்கும்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பெண் அலுவலர்களின் செயல்பாடு பாராட்டத்தக்க வகையில் உள்ளது. பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். 40 வயது கடந்தவர்கள் முழுமையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்திட வேண்டும்.

சமூகத்தில் பெண்கள் மீதான குற்றச்செயல்களை தடுத்திட தைரியமாக செயல்பட வேண்டும். பெண்ணுக்கு எதிராக அநீதி நடந்தால் அதை தட்டிக்கேட்க வேண்டும். அதுவும் அரசு ஊழியர்கள் எனில் அவர்கள் எந்தநிலையில் பணியாளர்களாக இருந்தாலும் சரி பெண்கள் மீதான குற்றச்செயல்களை தடுக்க முன்வர வேண்டும்.

பெண்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை வந்தால் அதை தடுக்க முயற்சிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கிடும் பொறுப்பு ஆண், பெண் இருபாலருக்கும் உள்ளது. அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உலக மகளிர் தினமான இன்று உறுதியேற்போம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் திருமதி ச.பிரதீபா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.எம்.அனிதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.