மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 13/06/2024
.

செ.வெ.எண்:-15/2024

நாள்:-10.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத் தொகைகள் மற்றும் 178 பயனாளிகளுக்கு ரூ. 20,64,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(10.06.2024) நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 231 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்கு திருணம், கல்வி, இயற்கை மரண நிதி உதவித்தொகைகள் என மொத்தம் 178 பயனாளிகளுக்கு ரூ.20,64,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில்(2023-2024) பள்ளிகளில் அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர் சேர்க்கை, உட்கட்டமைப்புகளை விரிவாக்குதல், கற்றல் கற்பித்தலில் புதுமையை ஏற்படுத்துதல், மாணவ, மாணவிகளின் தேர்ச்சியை அதிகரிக்கச் செய்தல், ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த பள்ளிகளை காமராஜர் விருதுக்கு தேர்வு செய்து, பரிசுத் தொகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,00,000, கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75,000, திண்டுக்கல் புறநகர் உண்டார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000, வேடசந்துார் செல்லக்குட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.25,000 என பரிசுத் தொகைக்கான காசோலைகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.