மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 210 நியாயவிலைக் கடைகளுக்கு கண்கருவிழி பதிவு கருவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/06/2024
.

செ.வெ.எண்:-25/2024

நாள்: 13.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 210 நியாயவிலைக் கடைகளுக்கு கண்கருவிழி பதிவு கருவிகளை வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு நியாயவிலைக்கடையில் இன்று(13.06.2024) நடைபெற்ற விழாவில் 210 நியாயவிலைக் கடைகளுக்கான கண்கருவிழி பதிவு கருவிகளை விற்பனையாளர்களிடம் வழங்கி, கண் கருவிழி ரேகை பதிவு செய்து குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கூட்டுறவுத்துறை மூலம் நியாயவிலைக்கடைகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்திற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற தனித்துறை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தை அழித்திடுவோம் என்றார் பாரதி. அந்த வகையில் தனிமனிதனின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்து நிறைவேற்றிடும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

குடும்ப அட்டைதாரர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அருகாமையிலேயே குடிமைப்பொருட்களை பெறும் வகையில் நியாய விலைக் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 1000-க்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு, புதியதாக முழு நேர நியாயவிலைக்கடைகள் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் வகையில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இன்றையதினம் தாடிக்கொம்பு பகுதிக்குட்பட்ட 210 நியாயவிலைக்கடைகளுக்கு கண்கருவிழி பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கைரேகை பதிவினால் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடற்ற ஏழை, எளிய பொதுமக்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் வழங்குவதற்காக இலவச வீட்டுமனைப்பட்டா, வீடு கட்டி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

முதலமைச்சர் கிராமப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.4000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகள் மேம்படுத்தப்பட்டு தரமான சாலைகள் அமைக்கப்பட்டு குக்கிராமங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் இதுவரை 8,000 கி.மீட்டர் நீளம் சாலைப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் இயற்கை இடர்பாடுகள் காரணமாக தாமதமாகியுள்ளன. அந்தப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகள் என கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் திரு.அன்புக்கரசன், தாடிக்கொம்பு பேரூராட்சித் தலைவர் திருமதி கவிதா சின்னத்தம்பி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.