மூடு

நில அளவைத் தொடர்பான விவரங்களை, இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்“ செயலி மூலம் பார்வையிட்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 19/06/2024

செ.வெ.எண்:-32/2024

நாள்:-16.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

நில அளவைத் தொடர்பான விவரங்களை, இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்“ செயலி மூலம் பார்வையிட்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில், பட்டா மாறுதல் – “தமிழ் நிலம்” கைப்பேசி செயலி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை (Tamil Nam Citizen portal) https://tamilnilam.tn.gov.in/citizen/ இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம்(ஊரகம்) மற்றும் தமிழ்நிலம்(நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பட்டா/சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம்/நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும், எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை தொடர்பு விளக்க பட்டியல்கள் (correlation statement) போன்றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள் இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள் பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்“ செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டுப் பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.