மூடு

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2024
.

செ.வெ.எண்:-46/2024

நாள்:-21.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டம் தடுப்பு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.06.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டி.எல்.2, எப்.எல்.1, /2,/3,/3A/4A மற்றும் இதர உரிமத்தலங்களில் கலால் துறையினர் குறிப்பிட்ட குறுகிய கால இடைவெளியில் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாத்திடும் பொருட்டு பள்ளி மற்றும் கல்லுாரிகள் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நடைபெறவில்லை என்பதை உறுதி செய்திட வேண்டும். மீறி விற்பனை நடந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து, உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள், நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தால், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டும், எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து, போதைப்பொருட்கள் நடமாட்டத்தினை தடுத்திட வேண்டும்.

சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பாகவோ, போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்தோ பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581, மதுவிலக்குப் பிரிவிற்கு 7845385637, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9498181204, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு 9498101520 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் வழங்கும் நபர் குறித்த ரகசியம் காக்கப்படும். எனவே, தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதனை தடுத்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், உதவி ஆணையர்(கலால்) திரு.பால்பாண்டி, மாவட்ட மேலாளர்(டாஸ்மாக்) திரு.சரவணன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.