மூடு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 58 பயனாளிகளுக்கு ரூ.27.35 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/07/2024
.

செ.வெ.எண்:-18/2024

நாள்:-08.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 58 பயனாளிகளுக்கு ரூ.27.35 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.07.2024) நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 294 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்று, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி உபகரணங்கள் வாங்கிட மாநில நிதி 2023-2024-ன் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீதம் மானியம் அடிப்படையில் மீன்பிடி வலைகள் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20,000 தொகையில் ரூ.10,000 மற்றும் மீன்பிடி பரிசல் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20,000 தொகையில் ரூ.10,000 என்ற அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, திண்டுக்கல் வட்டம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 5 நபர்கள், நிலக்கோட்டை வட்டம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த ஒருவர், வேடசந்துார் வட்டம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த ஒருவர், ஒட்டன்சத்திரம் வட்டம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 3 பயனாளிகள் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டிலான மானியத்தில் பரிசல் மற்றும் மீன்பிடி வலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்,

தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் ரூ.60,000 மதிப்பீட்டிலும், ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் ரூ.65,000 மதிப்பீட்டிலும், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொழில் கடனுதவியாக 11 பயனாளிகளுக்கு ரூ.6.25 இலட்சம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பேட்டரி சக்கர நாற்காலி 17 நபர்களுக்கு ரூ.17.85 இலட்சம் மதிப்பீட்டிலும், என மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ.27.35 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின்பாத்திமா, இரண்டாமிடம் பெற்ற அரிசுபா, கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்ற ஆதிதர்ஷினி, இரண்டாமிடம் பெற்ற தனுஷா, ஓவியப்போட்டியில் முதலிடம் பெற்ற மதன், இரண்டாமிடம் பெற்ற சைபுல்லா ஆகியோருக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள், ஆண்டிற்கு 3 முறை இரத்த தானம் வழங்கிய 16 இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சாமிநாதன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு.கே.ஜனார்த்தனம், மீன்துறை ஆய்வாளர்கள் திருமதி இந்துசாரா, திருமதி ஞானசுந்தரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.