கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
செ.வெ.எண்:-67/2024
நாள்:-24.07.2024
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(24.07.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமையிலான தமிழ்நாடு அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு முன்னோடித் திட்டங்கள் மக்களுக்காகத் தீட்டப்பட்டு அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மக்களை சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.11.2023 அன்று அறிவித்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது 31.01.2024 அன்று திண்டுக்கல் மேற்கு வட்டத்திலும், 21.02.2024 அன்று நத்தம் வட்டத்திலும், 19.06.2024 அன்று வேடசந்துார் வட்டத்திலும் செயல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று(24.07.2024) கொடைக்கானல் வட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வணிகவரித்துறை, தொழிலாளர் நல வாரியம், மீன்வளத்துறை, வீட்டு வசதி வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேலைவாய்ப்புத் துறை, விளையாட்டுத்துறை, பால்வளத்துறை, பதிவுத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கித்துறை, போக்குவரத்துத்துறை, மின்சார வாரியம், பட்டுவளர்ச்சித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், வனத்துறை, தீயணைப்புத்துறை, வேளாண் வணிகம், குழந்தைகள் பாதுகாப்புத்துறை, உள்ளூர் திட்டங்குழுமம், பொதுப்பணித்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கலால் துறை, நில அளவைத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் துறை அலுவலர்களால் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்தும், கிராம நிர்வாக அலுவலகம் மூலமாக வழங்கப்படும் சான்றிதழ்கள் உடனுக்குடன் காலதாமதமின்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு மற்றும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள் இருப்பு, சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விவசாய மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் அனைத்தும் தகுதியான விவசாயிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்கள், பயனடைந்த விவசாயிகள் விபரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை பெறும் கால்நடைகளின் எண்ணிக்கை, பயன்பெறும் விவசாயிகள் எண்ணிக்கை, கால்நடைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, உட்கட்டமைப்பு வசதிகள், காலை சிற்றுண்டி திட்டம், மதிய உணவு திட்டங்களில் செயல்பாடுகள், அதன்மூலம் பயன்பெறும் மாணவ, மாணவிகள் குறித்தும், தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
“கலைஞர் கனவு இல்லம்“ திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதி நியாயவிலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பொருட்கள் இருப்பு, வழங்கப்படும் பொருட்களின் தரம், குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கை, பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து, கொடைக்கானல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில், பொருட்கள் இருப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் எண்ணிக்கை, மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொடைக்கானல் கிளை நுாலகத்தில் நுால்கள் இருப்பு, வாசகர்கள் வருகை, படிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொடைக்கானல் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், படிப்றைகள், சமையலறை, வழங்கப்படும் உணவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் இத்திட்ட முகாம்களில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு, அலுவலர்களின் ஆய்வு அறிக்கையை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவராம், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மாரி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.கங்காதேவி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், உதவி ஆணையர்(கலால்) திரு.பால்பாண்டி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் திருமதி பிரபாவதி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திரு.ராஜ்கமார், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.சத்தியநாராயணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி பா.காயத்ரி உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.