மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் 30.07.2024 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் 31.07.2024 அன்றும் நடைபெறவுள்ளன- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-79/2024
நாள்:-28.07.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் 30.07.2024 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் 31.07.2024 அன்றும் நடைபெறவுள்ளன- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி 2024-2025-ஆம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை(ஏப்ரல்-14-ஆம் தேதி) முன்னிட்டு பேச்சுப்போட்டி 30.07.2024 (செவ்வாய்க்கிழமை) அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை (ஜுன்-3-ஆம் தேதி) முன்னிட்டு பேச்சுப்போட்டி 31.07.2024 (புதன்கிழமை) அன்றும் திண்டுக்கல், அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் (6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை) பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக உரிய வழிமுறைகளை பின்பற்றி பள்ளி மாணவர்களுக்கு காலை 10.00 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2.00 மணி முதலும் நடைபெறவுள்ளன.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 30.07.2024 அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு “1) அம்பேத்கரின் சமூகநீதி 2) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் 3) அம்பேத்கரின் இளமைப் பருவம் 4) அம்பேத்கரின் அரசியல் வாழ்வு 5) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அம்பேத்கரின் பங்கு 6) அம்பேத்கரும் வட்ட மேசை மாநாடும் 7) அம்பேத்கரும் காந்தியடிகளும்” ஆகிய தலைப்புகளிலும், அதேநாள் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப் போட்டிக்கு “1) அம்பேத்கரும், பெரியாரும், 2) அம்பேத்கரும் சமத்துவமும், 3)அம்பேத்கரும் அரசியல் சட்டமும், 4) அம்பேத்கரின் சமுதாயப் பணிகள், 5) அம்பேத்கரும் சாதி ஒழிப்பும், 6)அம்பேத்கர் என்னும் ஆளுமை, 7)அம்பேத்கரும் பௌத்தமும் எனும் தலைமைப்புகளில்” போட்டிகள் நடத்தப்படும்.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி 31.07.2024 அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு “1) நானறிந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர், 2) பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும், 3) கலைஞர் தந்த கல்வித் திட்டங்கள், 4) கலைஞரின் கலைப்பணி, 5) கலைஞரின் தமிழ்த் தொண்டு, 6) அண்ணாவும் கலைஞரும், 7) கலைஞரின் பகுத்தறிவுக் கொள்கைகள்” எனும் தலைப்புகளிலும், அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு “1) கலைஞரின் பராசக்தி, 2) கலைஞரின் குறளோவியம், 3) மனித நேயமிக்க முத்தமிழறிஞர் திட்டங்கள், 4) கலைஞரின் அரசியல் சாதனைகள், 5) கலைஞரும் தமிழும், 6) கலைஞர் ஒரு கலைக்கூடம், 7) கலைஞரின் படைப்புகள்” ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்படும்.
மாவட்டங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் செயல்படும் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு முதல் சுற்றுப் பேச்சுப்போட்டியினை அந்தப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடுவர் உட்பட அவர்களாலேயே தெரிவு செய்து போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தப்பெற்று வெற்றி பெற்ற இரண்டு மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் வாலாயமாகத் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தவிரப் பிற பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தலைமையாசிரியர் மற்றும் முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
கல்லூரி பேச்சுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு போட்டியிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.