மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 2,196 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது, என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
.

செ.வெ.எண்:-29/2024

நாள்:12.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 2,196 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது, என தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 2,196 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை இன்று(12.08.2024) வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம், என்ற வகையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்துள்ளார்கள்.

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க, நிரந்தர வீடுகள் வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்குவதற்காக “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. மேலும், ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் குறைவான வட்டியில் ரூ.1.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது.

மேலும், தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை பழுது பார்க்க ரூ.2,000 கோடி நிதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள்.

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,328 வீடுகள் கட்டப்படவுள்ளன. இன்றையதினம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 1016 வீடுகள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 1069 வீடுகள், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 111 வீடுகள் என மொத்தம் 2,196 வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, சேமிப்பு ஏற்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.2.00 வரையிலான மருத்துவ செலவை அரசே ஏற்கும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள் மற்றும் கணினி கடந்த வாரம் வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் 30 கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 6 கல்லுாரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், ஒரு தொழிற்பயிற்சி நிலையம், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், பழனியில் ஒரு சித்தா கல்லுாரி, ஆகியவை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. நத்தம் சட்டமன்ற தொகுதியில் விரைவியல் அரசு கல்லுாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரம், ஆத்துாரில் கல்லுாரிகள் தொடங்கப்பட்டு, அந்த கல்லுாரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 22 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் குடிமைப்பொருட்களை பெறுவதற்காக நீண்ட துாரம் சென்று சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடிமைப்பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில், புதியதாக நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2009 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேரம் நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தல் 230 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 70 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில், தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 16 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலம் பதிவுகள் மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கண் கருவிழி பதிவுகள் மேற்கொள்ள 36,000 நியாயவிலைக் கடைகளிலும் கண்கருவிழி பதிவு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் இயந்திரம் பொருத்தப்பட்ட 676 அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு கறுப்பு, பழுப்பு இல்லாத தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் என்ற வகையில் வழங்கப்படும்.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டிலும் 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் 2000 கி.மீட்டர் நீளம் சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 கி.மீட்டர் நீளம் சாலைகள் மேம்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

விவசாயப்பணிகளை மேம்படுத்துவதற்காக 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதிபெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திரு.திருமலைச்சாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி காயத்ரிதேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் திருமதி சுபாஷினி, வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு. ஜோதீஸ்வரன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.