மூடு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்ற உன்னத நிகழ்வை தமிழ் மண்ணில் அரங்கேற்றிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். சுரேஷ்குமார் அவர்கள் பாராட்டு

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024

வெளியீடு எண் 91/ 2024

நாள் 25.08.2024

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்ற உன்னத நிகழ்வை தமிழ் மண்ணில் அரங்கேற்றிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். சுரேஷ்குமார் அவர்கள் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டு நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று (25.08.2024) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.அர.சக்கரபாணி, திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ஆர்.சுரேஷ்குமார் மாநாட்டு மலரினை வெளியிட்டு சிறப்புரையாற்றுகையில் இப்படிப்பட்ட ஒரு உன்னதமான நிகழ்வை தமிழ் மண்ணிலே அரங்கேற்றிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் நாளான நேற்று (24.08.2024) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற மாநாட்டினை தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்கள். முதல் நாள் நிகழ்ச்சியில் மாநாட்டு வளாகத்தில் மாநாட்டு கொடி ஏற்றபட்டு, வேல் அரங்கம், அறுபடைவீடுகளின் காட்சி அரங்கங்கள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி போன்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.இ. பெரியசாமி, திரு.அர.சக்கரபாணி, திரு.பி.கே. சேகர்பாபு ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களும், முருக பக்தர்களும் தொடர்ந்து கண்டுகளித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, ஆய்வு மலர்கள் வெளியிடப்பட்டதோடு, கருத்தரங்கம், இசை நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று (25.08.2024) நடைபெற்ற இரண்டாம் நாள் தொடக்க விழாவினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர், மாநாட்டு விழா மலரை மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் வெளியிட, கோவை கௌமார மடம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் பெற்று கொண்டார்.

அதனை தொடர்ந்து மாண்புமிகு நீதியரசர் திரு. ஆர்.சுரேஷ் குமார் அவர்கள் பேசியதாவது, நாம் எத்தனையோ மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். தமிழுக்காக நிறைய மாநாடுகளை நடத்தி இருக்கிறோம் இன்னும் பல்வேறு தளங்களிலே தமிழ் மண் பல நிகழ்வுகளை, மாநாடுகளை, பெரும் கூட்டங்களை சந்தித்து இருக்கிறது. ஆனால் ஒரு தமிழ் ஆன்மீக மாநாடாக அதிலும் முருகப்பெருமானுடைய பெயரை தாங்கி நடத்துகின்ற ஒரு பெரும் மாநாடாக உலக அளவில் நடைபெறுகின்ற மாநாடு இதுதான் முதல் முறையாகும். என்ன காரணத்திற்காக தமிழோடு முருகனை இணைத்து மாநாடு நடத்துகிறார்கள் என்ற கேள்வியை நேற்று பலர் எழுப்பினார்கள். இன்றைக்கும் பலருக்கு அக்கேள்வி எழும்.

முருகன் தமிழ் கடவுள் எனவே முருகன் பெயரைச் சொன்னாலே தமிழ் மாநாடு தான். தமிழுக்கு மாநாடு நடத்தினாலே அது முருகனுக்கான மாநாடு தான் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு போய்விடலாம். முருகன் மாத்திரம் தான் தமிழ் கடவுளா, முருகனைத் தாண்டி தமிழ் கடவுள் எவரும் இல்லையா? தமிழ் நல்லுலகிலே நாம் வணங்குகின்ற தெய்வங்கள் எல்லாம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்து இருக்கின்ற தெய்வங்கள் இல்லையா? இதற்கு பலர் பல்வேறு விளக்கங்களை சொன்னார்கள். தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய தமிழை பேசுகின்ற சாமானியனின் எண்ணங்களில் எழுகின்ற வினா முருகன் மட்டும்தான் தமிழ் கடவுளா என்பதே ஆகும். இந்த வினாவிற்கு நாம் விடை காண வேண்டும் என்று சொன்னால் முருகன் என்பவர் யார் எப்போது தோன்றினார் முருகனை யார் தோற்றுவித்தார்கள் என்ற கேள்விகளுக்கு இரண்டு விதமான வரலாற்று புரிதல்கள் இருக்கின்றது.

தமிழ் இலக்கியங்களில் உள்ள கதைகளின்படி பார்த்தால் முருகன் தமிழ் கடவுள் என்று நிறுவுவதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன. எந்த மார்க்கத்தில் பார்த்தாலும் முருகப்பெருமான் தான் முழு முதல் தமிழ் கடவுள். அப்படிப்பட்ட தமிழ் கடவுள் வணங்கிய தமிழை கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் உலகத்திலே இருக்கக்கூடிய தமிழர்களை, முருக பக்தர்களை ஒன்றிணைத்து இன்றைக்கு முதல் உலக முத்தமிழ் மாநாட்டை நாட்டினை அறநிலையத்துறை நடத்தி இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை. இங்கே பல மாச்சரியமான கருத்துக்கள் உள்ளன. இவர்கள் எதற்கு மாநாடு நடத்துகிறார்கள், இவர்களுடைய கொள்கைக்கு ஏற்றதா என்று கேள்விகள் கேட்கலாம். எல்லாருக்குமான ஒரே பதில், இறையை உணர்ந்து, தமிழை அறிந்து, தமிழை உணர்ந்து, தமிழ் கடவுளான முருகனை அறிந்து, தமிழ் கடவுள் ஆன முருகனின் வீர பராக்கிரமங்களை அறிந்து, தமிழ் மொழியின் செழுமையை உணர்ந்து, முருகன் தான் தமிழ், தமிழ் தான் முருகன் என்று உணர்ந்து இன்றைக்கு இந்த மாநாட்டை நடத்தி வருகின்ற தமிழ்நாடு அரசும், அறநிலையத்துறையும் பாராட்டக்குரியது.

36 இலக்கியங்களைக் கொண்ட சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு தான் மிக மூத்த இலக்கியங்களாக வைக்கப்பட்டுள்ளன. அந்த பத்துப்பாட்டில் முதன்மை பாட்டாக வைக்கப்பட்டுள்ள திருமுருகாற்றுப்படையாகும். இரண்டாம் நூற்றாண்டிலே நக்கீரர் படைக்கின்ற போது எல்லோரும் பரிசுகள் பெற வேண்டும் என்பதற்காக பரிசு பெற்ற ஒரு பாணன் பரிசு பெற விரும்புகின்ற ஒரு பாணனை ஆற்றுப்படுத்துவதற்காக பாடுவது தான் ஆற்றுப்படை இலக்கியமாகும். அப்படி பாணர்களுக்காக ஆற்றுப்படை பாடிய இலக்கியங்களின் மத்தியில், முருகனை வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகனின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களை வழிபடுத்தி நெறிப்படுத்தி ஆற்றுப்படுத்துவதற்காக படைக்கப்பட்டதே திருமுருகாற்றுப்படையாகும். அதனால்தான் சங்க இலக்கியங்களை தொகுக்கும்போது திருமுருகாற்றுப்படை முதல் இலக்கியமாக வைத்து நம்முடைய முன்னோர்கள் படைத்து தந்திருக்கிறார்கள். அப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்பு முருக பக்தர்களை முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகின்ற வேலையை நக்கீர செய்தார்.

2000 ஆண்டுகள் தமிழ் மண்ணிலே பலரை முருகனை நோக்கி ஆற்றுப்படுகின்ற முருகனுடைய அருளை பெற விரும்புகின்ற பல கோடி முருக பக்தர்களை ஆற்றபடுத்துகின்ற வேலையை இந்த முருக மாநாட்டின் மூலமாக தமிழ்நாடு அரசும், இந்த துறையும், அதன் அமைச்சர் சேகர்பாபு அவர்களும் செய்திருக்கிறார்கள். எனவே இந்த மாநாட்டை தந்த தமிழக அரசும் இந்த துறையும் அதன் அமைச்சர் அவர்களும் இந்த மாநாட்டை உலக முத்தமிழ் முருகன் மாநாடு என்று சொல்லுவதற்கு பதிலாக உலக முத்தமிழ் முருகன் ஆற்றுப்படை மாநாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான நிகழ்வை தமிழ் மண்ணிலே இன்றைக்கு அரங்கேற்றி இருக்கின்ற தமிழக அரசை பாராட்டுகிறேன்.

தமிழகத்தின் அறநிலையத்துறையை பாராட்டுகிறேன். அதன் செயல் வீரராக இருக்கிற அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டுகிறேன். அந்தத் துறையின் செயலர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களையும், உலகெங்குமிருந்து இங்கு வந்திருக்கக் கூடிய தமிழ் சான்றோர்களையும் முருக பக்தர்களையும் பாராட்டுகிறேன். முருகனுடைய புகழும் வெற்றியும் தொடரட்டும், இந்த மாநாட்டின் மூலமாக தமிழ் வென்று இருக்கிறது, முருகன் வென்று இருக்கிறான் என்று சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐ.பி.செந்தில்குமார், தவத்திரு ஆதீன பெருமக்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : உதவி இயக்குநர் /மக்கள் தொடர்பு, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை-34.